25 – கெட்டவனுக்குக் கெட்டவன்
24-பிப்-2022. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முதல் தாக்குதல் ஆரம்பமானது. பிரம்மாண்ட ஆன்டோனோவ் விமான நிலையத்தின் மீது விழுந்த முதல் குண்டு அல்ல. ஒன்றரை அடிப் பெட்டிபோல இருக்கும் வையசாட் KA-SAT மோடம்கள் மீது நடந்தது. உக்ரைனின் ஆயிரக்கணக்கான இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தகவல் பரிமாற்றம் தடைப்பட்டது. கூடவே மத்திய ஐரோப்பாவின் காற்றாலைகளும் செயலிழந்தன. ‘அமில மழை’ என்றழைக்கப்பட்ட சைபர் தாக்குதல் இது.
கூடவே, அரசு சேமித்து வைத்திருந்த அனைத்துத் தரவுகளும் துடைத்தெடுக்கப்பட்டது. விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிய உக்ரைன் அரசுக் கணினிகள் கோமா நிலைக்குச் சென்றன. வீடுகளில் பொருத்தியிருந்த கேமராக்கள், ரஷ்யாவின் கண்களாகின. விசுவாசத்தோடு, ரஷ்யாவிலிருந்து இயக்கும் தன் எஜமானனுக்கு, உக்ரைனின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின. இதனால் துல்லியமாகக் குண்டு போடுவது, ரஷ்யாவிற்குச் சுலபமானது.
உக்ரைன் என்றல்ல…. ரஷ்யாவை எதிர்க்கலாம் என்று எந்த நாடு நினைத்தாலும் அவர்களுக்கான முதல் எச்சரிக்கை சைபர்த் தாக்குதலே. நேட்டோவில் இணைந்ததற்குப் பரிசாக ஸ்வீடன் நாட்டிற்கும் வழங்கப்பட்டது. 120 அரசு அலுவலகங்களின் டிஜிட்டல் சேவை, வாரக்கணக்கில் முடக்கப்பட்டன. போலந்து வாலாட்டினால் அவர்களுக்கும் இதே கதிதான்.
Add Comment