இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சில நண்பர்கள் சந்திக்க ஓராண்டுக்கு முன்னர் திட்டமிட்டோம். கொழும்பில் சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனாலும் இலங்கையில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பித்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும் எனும் பழமொழியை நினைவு படுத்தியது.
வெளிநாடுகளிலிருந்து வர இருந்த நண்பர்கள் அனைவரும் பல மாதங்களுக்கு முன்னரே ஃப்ளைட் டிக்கெட் வாங்கி விட்டோம். இலங்கையிலுள்ள நண்பர்கள் உள்ளூர்ப் பயண வசதிகளை ஒழுங்கு செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனாலும் நாம் வாழும் நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கின. இந்த உத்தியோகபூர்வ அறிவுரையின் விளைவு என்னவென்றால் பயணக் காப்புறுதிகள் ஒன்றும் செல்லுபடியாகாது. விபத்து அல்லது வேறு ஏதாவது அவசர மருத்துவத் தேவைகள் ஏற்படின் அதற்கான முழுச் செலவும் நாமே பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் உள்ள தேசமென்பதால், அவர்களே எமது அவசரத் தேவைக்கான பயணக் காப்புறுதி என்று முன்வைத்த காலைப் பின் வைக்காமல் பயணத்தை மேற்கொண்டோம். சொந்த நாட்டுக்குப் போய்வர இத்தனைக் களேபரம்!
Add Comment