அறிமுகம்
உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் அதிகப் பெறுமதி கொண்ட மூன்று நிறுவனங்கள் எவை..? ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அல்ஃபாபெட் ஆகியவையே முன்னணியில் நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதியும் சில டிரில்லியன் டாலர்களில் உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டின் இன்றைய தலைமை நிர்வாகிகள் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களாவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்தியா நடெல்லா. அல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை.
சில டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பன்னாட்டு நிறுவனத்தின் ‘தல’ ஆக வருவது என்பது சாதாரணமான சாதனையல்ல. மேற்குறிப்பிட்ட சத்தியா நடெல்லாவும், சுந்தர் பிச்சையும் இந்நிறுவனங்களில் தொழில்நுட்பத் தொழிலாளிகளாக அடியெடுத்து வைத்துத் தலைமைப் பதவி வரை படிப்படியாக முன்னேறியவர்கள். இவர்களைப் போல மிகவும் பிரபலமான பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை அதிகாரிகளாகப் பணி புரிகிறார்கள் அல்லது பணி புரிந்திருக்கிறார்கள். இந்தத் ‘தல’ புராணம் தொடர் இவர்களில் சிலரின் வெற்றிப் பாதையையைத் துலக்கிக் காட்டவிருக்கிறது.
Add Comment