ஆகஸ்ட் 24, 2023 அன்று எல்லா நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் இதுவரை காணாத அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் ஒன்று காட்டப்பட்டது. ஜார்ஜியா வழக்கில், முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு $200,000 சொந்தப் பிணையில் (Bail bond), வெளியே வந்த அதிபர் டிரம்ப்பின் புகைப்படம்தான் அது..!
அமெரிக்க அதிபர்களைப் புகைப்படம் எடுப்பது ஒன்றும் அரிதான காரியம் அல்ல. இதற்காகவே வெள்ளை மாளிகையில் புகைப்பட நிபுணர் உண்டு. பதவிக்காலம் முடிந்தபின் அவரை ஓவியமாக வரைந்து, அடுத்து வரும் அதிபர் அதைத் திறந்து வைப்பதும் ஒரு சம்பிரதாயமான நிகழ்வு.
ஆனால், பொழுதுபோக்குத் துறையில் பிரபலமானவர்களை பாப்பராசி மூலம் படமெடுக்க வைத்து, வதந்திகளை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி, தன் ஆடை, எப்படி வெளிப்படுகிறோம் என்பது முதல் தன் பிம்பம் வரை கவனிப்பாக இருப்பவர் டிரம்ப். ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர், சிறைச்சாலையில் கைது செய்யப்படுவதும், அவரை கைதிக்கான புகைப்படம் எடுப்பதும், அவருடைய கைரேகைகளை எடுப்பதும் அமெரிக்காவிற்கே புதியது..!
அதிகாரம் பொருந்திய வெள்ளை மாளிகையில் வாழ்ந்த ஒருவர், மிகக் கொடுமையான ஃபால்ட்டன் கவுண்டி சிறைக்குச் சென்றது விதியின் பிழையல்ல. அவர் செய்ததாகப் பதிவுசெய்யப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான செயல்களால். அவருடைய தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
Add Comment