அமீரகத்தோடு தமிழகத்தின் வர்த்தகத் தொடர்பைப் பலப்படுத்தும் விதமாக சென்னை வந்திருந்தார் அமீரக நிதி அமைச்சர் அப்துல்லா பின் தோக் அல் மாரி. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சந்திப்பின் போது, முதலீடுகள் சார்ந்து தமிழ் நாட்டின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, முப்பது பேர் கொண்ட குழுவையும் உடன் அழைத்து வந்துள்ளோம் என்றார். முதலீடு சார்ந்த பேச்சுவார்த்தைகள், சென்னை வீதிகளில் ஜாகிங், அது முடிந்த கையோடு அங்கேயே பத்திரிகையாளர் சந்திப்பு என அமைச்சர் நாடு திரும்பும் வரை தொடர்ந்து செய்திகளில் இருந்தார். 88% வெளிநாட்டவர்கள் வாழும் அமீரகத்தில், குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் (30-40%) இந்தியர்கள் வாழ்கிறார்கள்.
பாரசீக வளைகுடாவின் தெற்குக் கடற்கரையில் அபுதாபி, அஜ்மான், துபாய், ரஸ் அல் கைமா, ஷார்ஜா, புஜைரா, உம் அல் குவைன் என்னும் ஏழு ஷேக்தோம்களே (ஷேக், அரபு குழுத் தலைவர் ஆளும் பகுதி) முன்பு ‘ட்ரூசியல் ஸ்டேட்ஸ்’ என அறியப்பட்டது. இவற்றுக்கு அப்போதைய பிரித்தானிய ராஜ்ஜியம் கடல் வழி, தரை வழி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளித்து வந்தது. கைமாறாக இந்த ட்ரூசியல் நாடுகள் பிரிட்டனைத் தவிர மற்ற நாடுகளுடன் உறவு பாராட்டுவதில்லை என்றும், அதன் அனுமதி இல்லாமல் பிற நாடுகளுடன் வர்த்தகப் பரிவர்த்தனைகளை நடத்துவதில்லை என்றும் ஒப்பந்தம் இருந்தது. 1859 இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர், அரேபியத் தீபகற்பம் பிரிட்டனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியது.
அரபு தேசங்களுக்கும் பிரிட்டனின் ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டிருந்த இந்தியாவுக்கும் இடையே பெரிய அளவில் வர்த்தகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதைய பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைத்தான் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கென்று தனி ரூபாய்/ நாணயம் அப்போது இருக்கவில்லை. 1853 முதல் தொடங்கிப் பல ஆண்டுகளுக்கு இந்த ரூபாய்தான் அங்கு புழக்கத்தில் இருந்தது. பின்னர், 1959 ஆம் ஆண்டில் கல்ஃப் பணம் (இந்தியப் பணத்தின் கல்ஃப் பதிப்பு) உபயோகத்திற்கு வந்தது. அதன் பிறகு 1973 ஆம் ஆண்டு திர்ஹம் என்னும் அதிகாரப்பூர்வப் பணம் அறிமுகப்படுத்தும் வரை சவுதி ரியல், பஹரினி தினார் போன்றவை உபயோகத்தில் இருந்தன.
Add Comment