இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் விரும்பி செல்லும் உல்லாசத் தேசம், தாய்லாந்து. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுவந்துள்ளனர். அங்குதான் ஒரு காலத்தில் பத்தாயிரம் தமிழர்கள் ஒன்றாக ஒரே பெருங்குழியில் புதைக்கப்பட்டார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அது இரண்டாம் உலகப்போர்க் காலம். தாய்லாந்திலிருந்து பர்மாவின் தென் பகுதியை இணைக்கும் ரயில் பாதைப் பணி ஒன்றை ஜப்பான் முன்னெடுத்தது. 1942 ஆம் ஆண்டு தொடங்கியது அந்தத் திட்டம். மொத்தம் நானூற்றுப் பதினைந்து கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட பாதையைப் போடுவதற்கு ராணுவ வீரர்கள், எழுபதாயிரம் ஆஸ்திரேலிய, டச் போர்க் கைதிகள், அதோடு, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பர்மா, மலாயா பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அதில் எழுபதாயிரம் தமிழர்களும் அடங்குவர். ஆபத்தான அடர் வனப்பகுதிகள், மலைக்குன்றுகள், நீர் நிலைகள் என 600 பாலங்கள் கட்டவேண்டியதிருந்தது.
மலேரியாவை உண்டாக்கக்கூடிய கொசுக்கள் நிறைந்த காடுகளில் நாள் முழுவதும் வேலை. ஏராளமான மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். சரியான உணவு, உறைவிடமின்றி மிக மோசமான நிலையில் இருந்த பணியாளர் கூடாரங்கள் மேலும் பல உயிர்களைப் பலி கேட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய அந்த ரயில் தடத்தை ‘ மரணப் பாதை’ என்று தான் குறிப்பிடுவார்கள். காவு கொள்ளப்பட்டதில் தாய்லாந்து தமிழர்களும் அடங்குவர்.
Add Comment