கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்திய காமன்வெல்த் வர்த்தகச் சபைக் கூட்டத்தில், செஷல்ஸ் நாட்டின் உயர் ஆணையர் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசியவர், வர்த்தக ரீதியிலான முதலீடுகளுடன் இந்தியாவிலிருந்து நாங்கள் வணிகர்களைப் பெருமளவில் எதிர்பார்க்கிறோம் என்றார். நிகரற்ற அழகிய கடற்கரைகளைத் தாண்டி எங்களிடம் பல தொழில் வாய்ப்புகள் உள்ளன எனச் சொல்லி இங்கிருக்கும் தமிழ் வணிகர்களை வரச் சொல்லி அழைப்புவிடுத்தார். விழாவில் செஷல்ஸ் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்தியப்பெருங்கடலில் சோமாலி கடல் பகுதியில் இருக்கும் ஒரு கிழக்கு ஆப்ரிக்கத் தேசம் செஷெல்ஸ். உலக வரைபடத்தில் சிறு புள்ளியாகத்தான் தெரியும். கூகுள் மேப்ஸை சற்றே பெரிதாக்கிப் பார்த்தால் வேண்டுமானால் அந்தத் தீவுக்கூட்டங்கள் புலப்படும். செஷல்ஸ் தீவுகள் உண்மையில் பெருங்கடலின் மத்தியில் மிதக்கும் ரத்தினக் கற்களைப் போலத் தான் காட்சியளிக்கும். ஓரிரண்டல்ல, நூற்றுப்பதினைந்து குட்டி குட்டித் தீவுகள் மொத்தமாகச் சேர்த்துத் தான் செஷல்ஸ் என்றழைக்கப்படுகிறது. அதில் பாதிக் கருங்கல் (கிரானைட்) பாறைகள் கொண்ட தீவுகள், மீதி பவளத்தீவுகள், சில இரண்டும் சேர்ந்த கலவை.
ஆப்பிரிக்க நாடுகளிலேயே சிறியதும், குறைந்த ஆப்பிரிக்க இன மக்கள் தொகை கொண்டதும் இந்தத் தீவு தான். இருப்பதிலேயே பெரிய தீவான விக்டோரியா தான் தலைநகரம். அடுத்த பெரிய தீவு மாஹே. மரகதப் பச்சை மற்றும் நீல நிறங்களில் மயக்கும் கடற்கரைகள், வசீகர நிலப்பரப்பு எனச் சுற்றுலா தேசமாக இருக்கிறது.
Add Comment