திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் 103 தங்க நாணயங்கள் அடங்கிய அரிய புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் விஜயநகரக் காலத்தைச் சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது போன்று கோவிலில் கிடைக்கும் புதையல்கள் யாருக்குச் சொந்தம்? இதற்கு முன்பு தமிழகக் கோவில்களில் கிடைத்த புதையல்கள் என்னென்ன? விஜயநகரப் பேரரசுக்கும், தமிழகக் கோவில் புனரமைப்புகளுக்கும் அப்படி என்ன நெருங்கிய தொடர்பு?
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில், கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதி சிவன் கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோவில், திருமூலநாதர் திருக்கோவில் என்ற பெயரில் இப்போது வழங்கப்படுகிறது. இது மூன்றாம் ராஜராஜ சோழன் (ஆட்சிக்காலம்: கி.பி. 1216–1256) காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நவம்பர் மூன்றாம் தேதி, கோவிலின் கருவறைப் பணிக்காகப் பள்ளம் தோண்டியபோது, சிவலிங்கம் இருந்த இடத்திற்கு அடியில் ஒரு மண்பானை தென்பட்டது. அதைத் திறந்து பார்த்தபோது, நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் 103 தங்க நாணயங்கள் கிடைத்தன. இவை போளூர் அரசுக் கருவூலத்தில் ஆய்வு செய்யப்பட்டன. அதில் இந்த நாணயங்கள் சுமார் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகரப் பேரரசு (கி.பி. 14–16ஆம் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தங்கக் காசுகள் மிகச் சிறிய அளவிலானவை. கோவில் மற்றும் வீடு கட்டும்போது கருவறை மற்றும் நில வாயில்படி பகுதியில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக ஒரு பானையில் இவை கிடைத்திருப்பதால், கருவறையில் சிவலிங்கம் பொருத்தப்படுவதற்கு முன்னால் ஐதீகத்தின்படி மொத்தமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.















Add Comment