42 தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972)
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து வருகின்ற தியாகராசர் ஆராதனை என்ற வருடாந்திர நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, தொடக்கத்திலேயே தமிழ்ப்பாடலில் தொடங்கி, நிறைவாகவும் தமிழ்ப்பாடல்களைப் பாடி நிறைவு செய்தவர். தமிழ்ப்பாடலைப் பாடியதால் திருவையாறு ஆராதனை மண்டபத்தின் புனிதம் கெட்டு விட்டது என்று சாண நீரூற்றிக் கழுவினார்கள் என்ற செய்தி வந்தபோதும் அதைப் பற்றிச் சிறிதும் கவலையோ,பொருட்டோ செய்யாதவர். தமிழ்த் திரைப்பட உலகையும் தனது ஆளுமை மிக்க இசைக் குரலால் ஆண்டு வரலாறு படைத்தவர். மதுரை வடக்குச் சித்திரை வீதியில் நடைபெறும் வருடாந்திர அம்பாள் உற்சவத்தில் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களையே தேடிப்பாடி, தமிழிசை இயக்கம் வலுப்பெறுவதற்கு உரமிட்டவர். இசை என்பது தனிப்பட்ட சிறு குழுக்கள் மண்டபங்களில், சபாக்களில் உட்கார்ந்து பாடிக்கொண்டும், கேட்டுக் கொண்டும் போவதற்கானதல்ல; மாறாகச் சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்க்கைச் சூழல்களில் பொதிந்து கலந்து அனுபவிக்கும் ஒன்றாக, இனங்காணும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்.
அவரது கச்சேரியைக் கேட்க நேர்ந்த பத்திரிகையாசிரியர் கல்கி இவ்வாறு எழுதுகிறார், ‘தேசிகரின் தமிழிசையில் எனக்குப் பெரும் மதிப்புண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் இன்னும் பன்மடங்கு பெருகியது. கம்பீரமான சாரீரம்; ஒலிக்கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று. சாகித்தியத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்ல வேண்டும். அவர் சுவரம் பாடுவதில்லை; இராக வித்தாரங்களில் புகுந்து சால வித்தைகள் செய்வதில்லை. நேரே நெடுகப் பாடிக் கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களேயே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களைச் சுத்தமாக வாய்நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நாம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது. ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம்- இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடி வந்தார் தேசிகர். கச்சேரியை முடித்தபோது, ஏன் முடித்தார் என்றிருந்தது’.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறைத் தலைவராக பதினைந்து ஆண்டுகள் பணியாற்றி அருந்தொண்டாற்றியவர். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாயக நடிகர்களேதான் பாடல்களையும் பாடினார்கள். தியாகராச பாகவதர் போன்றவர்கள் திரை நாயகராகவும் இசை நாயகராகவும் இம்முறையில்தான் பெரும்புகழ் பெற்றார்கள். இந்த வரிசையில் தமிழில் முதன்முதல் வெள்ளிவிழாப் படத்தை அளித்த நாயகரும் இவர்தான். அவர்தான் ‘தாமரை பூத்த தடாகமடி’ பாடலைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்திய மதுரை முத்துசாமி தண்டபாணி தேசிகர் என்ற எம்.எம்.தண்டபாணி தேசிகர்.
Add Comment