உ.வே.சாமிநாதய்யர்
1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில் பதப்படுத்தி, உலரவைத்துப் பதப்படுத்துவார்கள். பின்னர் எண்ணெயிட்டுக் காயவைப்பார்கள். பின்னர் சுவடி வடிவத்திற்குக் கத்தரித்து எடுத்து, சுவடிக் கட்டுக்கு பலகைகளைச் செதுக்கி, மேல்தட்டும், கீழ்த்தட்டும் சேர்ப்பார்கள். பின்னர் ஓலைகளின் ஒரு முனையில் கட்டுவதற்குத் துளையிடுவார்கள். இந்த வடிவில் சுவடிகள் சேமித்து வைக்கப்படும். இவற்றில் எழுத்தாணி கொண்டே தமிழ் நூல்கள், இலக்கியங்கள் எழுதப்பட்டன. இவ்வாறு சுவடிகளில் எழுதுவது பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டிய பணி எனினும், பனையோலைச் சுவடிகளின் நீண்ட ஆயுள் கருதி, நூல்கள் இவ்வாறு ஏடுகளில்தான் ஆக்கப்பெற்றன. நல்ல முறையில் உருவாக்கப்பட்ட ஓர் ஓலைச்சுவடி, நூற்றைம்பது ஆண்டுகள் வரை கூடக் கெடாது, அழியாது இருக்கும். பனையோலையின் ஆயுள் அப்படி. பனையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மிகத் தொடக்கக் காலத்திலேயே கற்றவன் தமிழன். தமிழிலக்கிய நூல்கள் இவ்வாறு, நெடிது நீடிக்கும் பனையோலையில் எழுதி வைத்துப் பாதுகாக்கப்பட்டதால்தான், அவை மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வு அறுபடாது அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டுக் கிடைத்தன.
Add Comment