26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953)
தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும் எமக்குச் சொந்தமானவரே என்ற பெருவாக்கியம். உலகம் முழுவதையும் தனக்குடைமையாகக் கருதுவதும், தமக்கு உடைமையானது உலகம் முழுமைக்கும் பொதுமையானது என்கிற பெருநோக்கும் கொண்ட வாக்கியம் அது. அந்த வாக்கியத்தை எழுதிய சங்ககாலப் புலவன் கணியன் பூங்குன்றன். கணியன் என்றால் கணக்கறிவு, வானியல், சோதிட அறிவு நிரம்பியவன். பூங்குன்றன் என்பது பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்தவன் என்பதைக் குறிக்கிறது. அந்தப் பூங்குன்றம் என்பது பாண்டியநாட்டில் ஒரு நாட்டுப் பகுதிக்குப் பெயர். அந்தப் பூங்குன்றத்தில் 24 கிராமங்கள் இருந்தன, இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மகிபாலன்பட்டி. இன்றைய புதுக்கோட்டை மாவடத்தில், பொன்னமராவதி நகருக்குப் பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். கணியன் பூங்குன்றனின் நினைவிடம் இன்றும் மகிபாலன்பட்டியில் இருக்கிறது. மதுரைக்கும், சேதுநாட்டுக்கும் இடைப்பட்டு அமைந்திருக்கும் இந்தப் பகுதிகள் தமிழ் வளர்ந்த, தமிழ்செறிந்த பகுதிகள். இந்தப் பகுதிக்குத் தமிழ்வாசம் தொன்று தொடர்ந்து உண்டு.
இந்தப் பகுதியில் பிறந்த இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்தான் பண்டிதமணி என்று புகழ்பெற்ற கதிரேசன் செட்டியார். எந்தவொரு பள்ளிக்கும் சென்று படிக்காத அவர், பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் பாடம் போதிக்கும் அளவுக்கு அறிஞராக உயர்ந்தது அவர் முயன்று கற்றறிந்த தமிழறிவால். அண்ணாமலைப் பல்கலை அவரை வேண்டி விரும்பித் தனது பல்கலையில் பேராசிரியராக நியமித்துப் பெருமைப்பட்டது. திருவாசகத்துக்கு கற்றறிந்த தமிழ்வேந்தர் பலரும் மெச்சிப்போற்றும் ஒரு உரையைத் தந்தவர் பண்டிதமணி. அந்த உரையைக் கேட்ட கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதையிலேயே போற்றிய பெருமைக்குரியவர் பண்டிதமணி.
புலவராக மட்டுமல்லாது புரவலராகவும் வாழ்ந்தவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் காலத்துக்குப் பிறகு, அவரது குடும்பத்தினருக்குப் பொருளுதவி செய்ய ஒரு இயக்கமாக இயங்கிப் பொருளுதவி செய்தவர்; அவருக்கு மட்டுமல்லாது, உ.வே.சா அவர்களுக்கும் உதவி செய்திருக்கிறார்; இதைக் கடிதத்தில் குறிப்பிட்டு உ.வே.சா நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதும் அளவுக்கு அந்த உதவி இருந்தது. புரவலராக மட்டுமின்றி, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் கூடிப்பேசிக் கலந்துரையாடி மகிழ ஒரு தமிழ்ச்சபை இருக்கவேண்டும் என்று நினைத்து, மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை என்ற பெயரில் ஒரு செந்தமிழ்ச்சபையைத் தோற்றுவித்தவர்; தமிழில் உ.வே.சாவுக்கு வழங்கப்பட்ட ‘மகாமகோபாத்தியாய’ என்ற பட்டம் கதிரேசன் செட்டியாருக்கும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.














Add Comment