23 பாபநாசம் சிவன் (26.09.1890 – 01.10.1973)
அறிமுகம்
சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் இந்தப் பட்டியலைப் பாருங்கள்… ‘மன்மத லீலையை வென்றாருண்டோ’ பாடல்? ‘ராதே உனக்கிந்தக் கோபம் ஆகாதடி..’ பாடல்? ‘வதனமே சந்திரபிம்பமோ..’ பாடல்? ‘உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ’ பாடல்? இவை அனைத்தையும் எழுதியவர் ஒருவரே. முன்னர் குறிப்பிட்ட பாடல் சிறிதே செவ்வியல் தன்மை கொண்ட ‘மேடைப்பாடல்’களுக்கு உரியது. பின்னர் குறிப்பிட்டவை அனைத்தும் திரைப்படங்களில் அமைந்து அமரத்துவம் பெற்றவை. ஆனால் புகழில் இரண்டு வகைப் பாடல்களுக்கும் எந்தக் குறையுமில்லை. தமிழகத் தியாகையர் என்று அவரது இரசிகர்கள், அபிமானிகள் அவரைப் பாராட்டினார்கள். ஒருகாலத்தில் அவருடைய பாடல்கள் தமிழகத்தில் ஒலிக்காத இடமே இல்லை எனலாம்.
‘தியாக பூமி’ போன்ற சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். அனைத்துக்கும் மேல் தெலுங்கு மொழி கோலோச்சிக் கொண்டிருந்த தமிழக செவ்வியல் இசை மேடைகளில் தமிழ்ப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்குவதற்கு முக்கியமான காரணம் என்று இவரைச் சொல்லலாம். அதனால் தமிழிசை தொடர்பான புலத்தில் இவரது பங்கு மகத்தானதாக அமைந்துவிட்டது. நெற்றியில் கட்டாகத் திருநீறு துலங்கக் கோயில்களில், நிகழ்வுகளில் இவரது பாடல்களைக் கேட்டவர்கள், இவரது இயற்பெயரை மறந்து இவரை சிவன் என்றே அழைக்கத் தொடங்கினர். இவர் 800’க்கும் மேற்பட்ட பாடல்களைத் திரைப்படங்களுக்காக மட்டுமே எழுதியிருக்கிறார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. (அக்காலத் திரைப்படங்களில் வந்த பாடல்கள் செவ்வியல் இசைக்கும் ஈடு தருவனவாக, அந்த மெட்டுக்குப் பொருந்துவனவாக இருந்தன என்பதை நாம் இங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!). மொத்தமாக செவ்வியல் சார்ந்த இசை மெட்டுகளில் 2500’க்கும் அதிகமான கிருதிகளை இயற்றியிருக்கிறார். “ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர்” என்று கவியரசு கண்ணதாசனால் வருணிக்கப் பெற்றவர் இவர். தமிழில் பெரும் எண்ணிக்கையில் இசைப்பாடல்களை வழங்கி தமிழிசை உலகுக்கு மாபெரும் தொண்டு செய்த, இராமசர்மா என்ற பிறப்பில் பெயரிடப்பட்ட பாபநாசம் சிவன் அவர்களே இந்த வார ‘உயிருக்கு நேர்’ பகுதியின் நாயகர்.
Add Comment