102. மாணாக்கன்
சார்வாகனுக்குக் கருவூர்ச் சித்தரின் பர்ணசாலையைக் கண்டதுமே பிடித்துப் போனது. அவரது குடில் ஆன்பொருநைக் கரையோரமே இருந்தது. சுற்றிலும் ஏராளமான பலா மரங்களும் சில தென்னைகளும் சிறியதொரு மூலிகைத் தோட்டமும் இருந்தன. நதியிலிருந்து விலகி வந்த கால்வாய் ஒன்று அவரது நந்தவனத்தை நனைத்து மீண்டதை அவன் ரசித்தான்.
இங்கே நின்றபடி இடக்கரத்தைத் தூக்கிக் காட்டுவீர்கள். மறுநொடி, நதி திசை மாறி இந்தப் பக்கம் வந்து மீளும். அப்படித்தானே?
என்று அவன் சிரித்தபடி வினவினான்.
ஓ, நீ முற்றிலும் தவறாக நினைத்துவிட்டாயப்பா. இந்தக் கால்வாயை அமைப்பதற்கு நான் எத்தனைப் பாடு பட்டேன் தெரியுமா? மன்னரின் அனுமதி சுலபமாகக் கிடைத்துவிட்டது. ஆனால் நான் விரும்பிய நேரத்தில் போதுமான ஆள்கள் அகப்படாமல் போய்விட்டார்கள்.
இதையும் நான் நம்புகிறேன் ஐயனே.
அவர் சற்றுப் பரிதாபமாக அவனை உற்று நோக்கினார். நீண்ட பெருமூச்சு விட்டார். பிறகு,
மீண்டும் என்னைச் சொல்ல வைக்கிறாய். நான் பொய் கூறுவதில்லை.











Add Comment