106. சீனம்
செயல் அல்லது நோக்கம் நல்லதா அல்லதா என்பதல்ல பொருட்டு. பதற்றம் மிகுந்த சிந்தை எதையும் சரியாகச் செய்ய அனுமதிக்காது. வேட்டன் எறிபத்தனின் முந்நூறாண்டு காலத் தவத்தையும் அது கனியும் காலம் கூடி வந்திருப்பதையும் மயூரம், மல்லனிடம் எடுத்துச் சொன்னதை அவன் சிந்தையில் படித்தேன். அது ஏன் அதனைக் குறிப்பிட்டது என்பதையும் அவன் எண்ணிப் பார்க்கத் துணியவில்லை என்பது வினோதமாக இருந்தது. பேயின் மீது ஏறிக்கொண்டு சோழ நாட்டை அவன் சுற்றி வரட்டும், இப்போதைக்கு அவனிடத்தில் எனக்குப் பணியுமில்லை பலனுமில்லை என்பது விளங்கிவிட்டதால், அக்கணமே நான் வேட்டனைக் கருதி, அவனது சிந்தைக்குள் புகுந்து படர்ந்தேன்.
அவன் தனித்திருந்தான். முந்நூறாண்டு காலமாகவும் அவன் அப்படியேதான் இருந்திருப்பான். அதே தடாகம். அதே தரு. அதே வெளி. அதே விண். அதே மண். அந்த இடம் எங்குள்ளதென்பதை யாரும் அறிய முடியா நிலையைக்கூட அவன் வரமாகப் பெற்றிருக்கக் கூடும். வரமளிக்கும் சிறு தேவதைகள் கேட்பவனின் நோக்கத்தைக் கருதுவதில்லை. கேட்கப்படும் விதத்தில் அவை மயங்கிவிடுகின்றன. அதற்காக மேற்கொள்ளும் தவத்தின் தீவிரமே தேவதைகளை அசைக்கின்றன. நல்லது. எனக்கு வரங்களின் தேவை கிடையாது. தேவதைகள் எனக்குப் பொருட்டல்ல. ஆனால் இம்மகத்தான தோல்வி சார்ந்து வேட்டனின் சிந்தை எதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறதென நான் தெரிந்துகொள்வது அவசியம். அதன் பொருட்டே அவனைக் கருதினேன்.
அவன் மல்லனைப் போலப் பதற்றம் கொண்டிருக்கவில்லை. அதுதான் எனக்கு முதலில் தென்பட்டது. நிதானமாகவே இருந்தான். ஆனால் தெளிவின்றிப் பல விதமாக எண்ணிப் பார்த்திருக்கிறான். முதல் முறை சார்வாகன் கைநழுவிப் போனபோது அது ஒரு தற்செயல் என்றே அவன் எண்ணியிருக்கிறான். புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ விதமான அபாயங்களைச் சந்திக்க நேரிடுவது இயல்பானது. விபத்துகளைத் தவிர்க்க இயலாது. அப்படியொரு விபத்து அல்லது அபாயம்தான் சார்வாகனுக்கு நேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதைக் குறித்துக் கவலைப்படவும் வருந்தவும் ஒன்றுமில்லை. அவன் மரணமற்றவன். இதை அவனறிய மாட்டான் என்றாலும் நானறிவேன் அல்லவா? நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?











Add Comment