தன்னுடைய காருக்கு எரிபொருள் நிரப்ப பதினெட்டு மணிநேரமாக வரிசையில் காத்திருக்கிறார் ஒக்சானா. இவர் கிரீமியாவில் வசிக்கிறார். உணவு, நடமாடும் கழிப்பறை வசதிகள், அலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதிகள், தினமும் உட்கொள்ளும் மருந்துகளுக்கான குளிர்பதன வசதிகள் என எரிபொருளுக்கான நீண்ட காத்திருப்புக்குத் தேவையான அனைத்தும் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவரது வாகனத்துக்கு பெட்ரோல் கிடைப்பது சந்தேகமே என்கிறார். இந்த நெருக்கடி விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் ரஷ்யா முழுவதும் தென்படவில்லை.
உலகின் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கும் ரஷ்யாவின் இன்றைய நிலைமைதான் இது. போர் தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் குடுமியைப் பிடித்திருக்கிறது உக்ரைன். ட்ரோன் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
கிரீமியா, மாஸ்கோ என ஆயிரம் மைல்கள் தாண்டிய இலக்குகளையும் சர்வசாதாரணமாகத் துவம்சம் செய்கின்றன இந்த ஆளில்லா அசுரன்கள். ரஷ்யாவின் நாற்பது சதவீத எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களை இவை காலி செய்துள்ளன. அதி கனரகத் தொழில்துறைகளான இந்நிறுவனங்களை அவ்வளவு சீக்கிரம் பழைய பயன்பாட்டு நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியாது. அதுவரை ரஷ்யாவின் நிலைமை திண்டாட்டமே.
















Add Comment