Home » உரி – 129
உரி நாள்தோறும்

உரி – 129

129. பெருந்துறவி

வான் கறுத்திருந்தது. வெளி குளிர்ந்து, வீசிய காற்றில் தண்மை கூடியிருந்தது. நிச்சயமாகப் பெயல் இருக்கும் என்றெண்ணிப் பட்சிகள் கூவிப் பறந்து கூடடைந்துகொண்டிருந்தன. வேரகத்தில் அந்தப் பெயல் கொண்டுவரப் போகிற வளப்பத்தினைக் குறித்து மகிழ்ந்து பேசியபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் குமரன் அருள் என்று ஒவ்வொருவரும் சொல்லிச் சென்றதைக் கவனித்தேன். எதையும் பொருட்படுத்தாதவனாகச் சார்வாகன் அக்கடம்ப மரத்தினடியில் கண் மூடி அமர்ந்திருந்தான். அவனைக் கருதி அவனது சிந்தைக்குள் படர்வதற்கு முன்பு அவன் இருந்த தோற்றத்தைச் சிறிது நேரம் உற்று நோக்கினேன்.

அவன் கடைசியாக எப்போது நீராடினான்? தஞ்சப்புரி படித்துறையில் இருந்தபோது நொடிப் பொழுது நீரில் விழுந்து மீண்டான் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை நீராடலெனச் சொல்லவியலாது. அவனது குடிசைக்கு வெளியே, வேட்டனைக் கருதித் தவமிருக்க அமரும் முன்னர் சித்தர் அவனை நீராடிவிட்டு வரச் சொல்லியிருந்தார். அப்போதும் நீரில் விழுந்து மீண்டானே தவிர தேய்த்துக் குளிக்கவில்லை. பிறகு எத்தனை அலைச்சல்கள், அலைபாய்ச்சல்கள்! குடந்தை மாநகரிலிருந்து வேரகத்துக்கு ஓட்டமும் நடையுமாக வந்தபோது அவனொரு கரும்பனிப் பாளம் போலத்தான் இருந்தான். மேனியெங்கும் வியர்வை நீர் உருகியோடிக்கொண்டிருந்தது. இரு கரங்களாலும் முகத்தை மட்டும் அடிக்கடி அழுந்தத் துடைத்துக்கொண்டு சிரத்தைச் சிலுப்பிக்கொள்வானே தவிர, புழுக்கத்தையோ, கசகசப்பையோ, நெடியையோ அவன் பொருட்படுத்திக் கண்டதில்லை.

அப்படிப்பட்டவன் தனது சித்தத்தைப் பொருட்படுத்தி, அதனை மீட்டு இருத்தி வைக்கத் தவமிருக்க முடிவு செய்தது அருஞ்செயலல்லவா? எனக்கென்னவோ கருவூரார் வஞ்சகர்களைக் கண்டறிவதினும் சார்வாகனின் சிந்தையிலும் செயலிலும் இரகசியமாக ஓர் உழவாரப் பணியை நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றியது. ஊகம்தான். என்னால் ஏறி அமர்ந்து அகழவியலாத சிந்தை அவருடையது. அதில் என்ன உள்ளதென்று நானெப்படி அறிவேன்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!