130. ஏழு சொற்கள்
தானொரு துறவி என்று தோன்றியதை அவன் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துத் திளைத்துக்கொண்டிருந்தான். வாழ்வில் மிக மிக முதல் முறையாக அப்படியோர் எண்ணம் உண்டானதை அவன் எதிர்கொள்ள ஆயத்தமாகியிருக்கவில்லை.
நல்லது. கருவூரார் குறிப்பிட்ட தவத்தில் ஏதோ இருக்கிறது. தேடுவதோ, எதிர்பாராததோ, ஏதோ ஒன்று அல்லது ஒரு சில நிச்சயமாக அகப்பட்டுவிடும் போலிருக்கிறது. ஆனால் இதை எதற்கு அவர் சிவத்துடன் கோத்து நிறுவப் பார்க்கிறார் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.
சிந்தை என்று நான் சொல்வதைச் சிவமென்று அவர் சொல்கிறார் என்றால், அதுவரை சரி. ஆனால் சிந்தையை ஆண் வடிவமாக்கிச் சிவத்தைச் சிவனென்று உருவகப்படுத்திப் பீடத்தில் நிறுவி, சுற்றிக் கோயிலெழுப்பி, சாம்பரை நீறென்று கொடுத்து நெற்றியில் பூசச் சொல்வதெல்லாம் பொருளற்றது என்பதில் ஐயமில்லை. சிந்தையே சிவமென்றால் சாம்பராவதா அதன் இயல்பு? உடலமென்றால் சரி. சிந்தை எப்படித் தனித்துச் சாம்பராகும்? சிந்தை செயலாற்றுவது நின்று போகும்போது உடலத்தை எரித்தால் சாம்பர் உண்டாகும். உடலோடு சிந்தை அழியும் என்பீரா? சிந்தை அழிவதால் அல்லவா உடலம் சாம்பராகிறது?











Add Comment