Home » உரி – 61
உரி நாள்தோறும்

உரி – 61

61. பாண்டம்

கருவூராரின் சாலைக்குக் கல்வி பயில வருவோர் எண்ணிக்கை எப்போதும் அதிகமிராது. வேட்டன் அவரிடம் சென்றுகொண்டிருந்த காலத்தில் ஆறு பிள்ளைகளுக்கு மட்டுமே அவர் போதித்துக்கொண்டிருந்தார். விடியும் நாழிகை தொடங்கி உச்சி காலம் வரை இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்து போதிப்பார். அவரது ஆசிரமத்திலேயே தங்கிப் பயிலும் இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு அவர் எப்போது போதிப்பார், அவர்கள் என்ன கற்கிறார்கள் என்று பிறருக்குத் தெரியாது. இந்த ஆறு பேருக்கு அவர் பாடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது அந்த இரண்டு பிள்ளைகளும் ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். கூட்டிச் சுத்தம் செய்வது, ஆற்றுக்குச் சென்று நீர் சேந்தி வருவது, மடைக் காரியங்கள் பார்ப்பது, ஓலைப் பதம் செய்வது, செதுக்கத் தோதாக அவற்றை நறுக்கி வைப்பது, மூலிகைகளைச் சுத்தம் செய்வது என்று அவர்களுக்கு எப்போதும் ஏதாவது பணி இருக்கும்.

ஒருநாள் வேட்டன் பாடங்கேட்டு முடித்து வீட்டுக்குச் சென்று, உணவருந்திச் சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, அந்தியில் தனது அணுக்கன் ஒருவனோடு ஆசிரமத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருந்த அமராவதியின் கரையில் ஆடிக் களிக்க வந்தான். இருட்டத் தொடங்கியிருந்த அந்நேரத்தில் அங்கே குருநாதரிடம் தங்கிப் பயிலும் மாணாக்கர்கள் இருவரும் சலப் பரப்பின் அருகே சம்மணமிட்டு அமர்ந்து தமக்குள் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரில் ஒருவன் திடீரென்று தனது இரு கரங்களையும் ஒன்றுடன் ஒன்று உரசி, மண்ணில் உதிர்க்க, அது ஒரு தீக்கங்காக விழுந்ததை வேட்டன் கண்டு அதிர்ச்சியடைந்தான். ஆனால் விழுந்த வேகத்தில் கங்கு அணைந்து போனது. உடனே எதிரில் இருந்தவன், தான் முயற்சி செய்வதாகச் சைகை செய்துவிட்டு, அதே போல இரண்டு கரங்களையும் ஒன்றோடொன்று உரசி உதிர்த்தான். அவனது உள்ளங்கைகளுக்குள் இருந்தும் ஒரு சிறிய கங்கு விழுந்தது. சில நொடிகள் எரிந்துவிட்டுப் பிறகு அதுவும் அணைந்தது. அவர்கள் கருகிக் கிடந்த கங்குகளையே உற்று நோக்கித் தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார்கள். பயின்றதில் என்ன பிழை செய்தோம் என்று சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்று வேட்டன் நினைத்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!