72. அச்சமும் ஆசையும்
தோற்றத்தில் அபுதுவுக்கு ஏறத்தாழ இருபது பிராயம் இருக்குமென்று தோன்றியது. அவனது நெற்றியும் நாசியும் சற்றுக் கூடுதலாக முன்புறம் நீண்டு புடைத்திருக்கக் கண்டேன். கண்கள் சாம்பரில் தோய்த்தாற் போலவும் செவிகள் விடைத்தும் இருந்தன. வளர்ந்துகொண்டிருந்தவனின் சிரத்தில் கை வைத்து அழுத்தி இருத்தினாற் போன்ற உயரமும் நெற்கதிரினைப் போன்ற தேகக் கட்டும் கொண்டிருந்தான். சார்வாகனைப் போலவே அவனது சடையும் பின்புறம் நீண்டு இடுப்பு வரை தொங்கிக்கொண்டிருந்தது. முழங்கால் தெரியும்படியாக அவன் உடுத்தியிருந்த அரைக்கச்சையில் நிறையக் கறைகள் பட்டிருந்தன. அவன் பச்சிலைகளைப் பதம் செய்யும் பணியில் இருந்ததை நான் கண்டிருக்கிறேன். அது அந்தக் கறையாக இருக்கலாம் என்று தோன்றியது.
சார்வாகன் புன்னகையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஏன் சிரிக்கிறாய் என்று அபுது கேட்டான்.
இதுதான் உன் உண்மைத் தோற்றமா?
தோற்றத்துக்கு நிரந்தரத்தன்மை கிடையாது சார்வாகனே. நீ பிறக்கும்போது இருந்த விதமாகவா இப்போது இருக்கிறாய்? அல்லது இன்னும் சில காலத்துக்குப் பின்பு இப்போது இருக்கும்விதமாக இருப்பாயா?










Add Comment