73. இன்னொன்றில்லாதவன்
உன் வாழ்வில் எப்போதாவது பொய்ம்மையின் பிடியில் விழுந்திருக்கிறாயா என்று சார்வாகன் அபுதுவைக் கேட்டான். அவன் யோசித்து, நீண்ட அவகாசமெடுத்து அதற்கு விடையிறுப்பானென்று எண்ணியிருந்தேன். ஆனால் சார்வாகன் கேட்டு முடித்த கணத்திலேயே அபுது சொன்னான்,
உள்ளதைச் சொன்னால் இத்தனை நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்ததே பாவமென்ற முடிவுக்கு வந்துவிடுவாய். அவ்வளவு பொய். வாழ்நாளில் ஒரு மனிதன் மொத்தமாகச் சொல்லக்கூடிய அத்தனை பொய்களையும் என் சிறு வயதில் நான் சொல்லித் தீர்த்துவிட்டேன்.
சார்வாகன் ஆர்வம் கொண்டு, அப்படியா? அப்படி என்னென்ன பொய்கள் சொல்லியிருக்கிறாய் என்று கேட்டான்.
ஒன்றிரண்டல்ல சார்வாகனே. அது பெரும் பட்டியல். வீட்டில் என் தாய் தந்தையிடம் தொடங்கியது அது. அற்பமென்றால் அற்பம். பெரிதென்றால் பெரிது. அந்த வகையில் பொய்ம்மையும் உண்மை நிகர்த்ததே அல்லவா? சிநேகிதர்களிடம், உற்றாரிடம், உறவினர்களிடம், தெரிந்தவர்களிடம், தெரியாதவர்களிடம் என்று கணக்கே இல்லை.










Add Comment