80. வெண்வெளி
அவள் பெயர் எனக்குத் தெரியாது. அல்லது இன்னும் நான் அறியவில்லை. அல்லது அவளுக்கும் பெயரென்ற ஒன்று இல்லாதிருக்கலாம். அவள் மயூரமுகியின் மகளென்று வேட்டன் வழியாகத் தெரிந்துகொண்துடன் சரி. ஆனால் பெயரற்றவனென்று நான் கருதியிருந்த மந்திரவாதியை அவள் மல்லா என்று அழைத்ததைக் கேட்டதும் நொடிப் பொழுது மகிழ்ந்தேன். மூவரில் ஒருவனுக்காவது பெயரடையாளம் கிடைத்ததே என்ற எண்ணம் அளித்த மகிழ்ச்சி. மல்லன் என்பது அவன் பெயராக அல்லாமல் அடையாளமாகவும் இருக்கலாம். அதனாலென்ன? மந்திரவாதியென்று குறிப்பிடுவதினும் மல்லனென்று சொன்னால் நினைவில் இருத்துவது சுலபம்.
நான் மல்லனைக் கருதி அவன் சிந்தைக்குப் பெயர்ந்தபோது வேட்டன் குறிப்பிட்ட வண்ணம் அவனும் அம்மயூரமும் இம அசலத்தின் மடியில்தான் இருந்தார்கள். மல்லனின் விழிகள் எட்டிய தொலைவெல்லாம் வெண்மை நிறைந்திருந்தது. சற்றே தாழ்ந்தும் சிறிது உயர்ந்தும் மடிந்தும் வளைந்தும் இருந்த அந்நிலத்தின் இயற்கை ஓரிரு இடங்களில் கருந்திட்டுகளாகத் தெரிந்ததே தவிர, நோக்குமிடமெல்லாம் இமத்தை அன்றி இன்னொன்றில்லை. அங்கே நதிகள் இல்லை. தருக்கள் இல்லை. மனித நடமாட்டமோ, மிருகங்களின் நடமாட்டமோ இல்லை. வசிப்பதற்கல்ல; யாரும் வந்து செல்லவும் வாய்ப்பற்ற இடமாகத் தேடிப் பிடித்துக் காதல் புரிய வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.
ஆனால் நான் நினைத்தது பிழை. அல்லது வேட்டன் குறிப்பிட்டதில் பாதி சரியாக இருக்கலாம். மல்லன் அங்கே இருந்தது காதல் களியாட்டுக்காக மட்டுமல்ல. அவன் கண்டம் வரை பனிக்குள் புதைந்து அமர்ந்திருந்தான். அவனது சடையும் தாடியும் புருவங்களும் பனி பூத்திருந்தன. சிரத்தின் மீது மயூரம் அமர்ந்திருந்தது. அதன் மீதும் பனி பெய்து வெண்மை படர்ந்திருந்தது.











Add Comment