79. காப்பு
எது குறித்தும் யாரைக் குறித்தும் நான் உணர்ச்சிவயத்தில் வீழ்ந்துவிடலாகாது என்று அடிக்கடி எண்ணிக்கொள்கிறேன். உங்களிடமும் தெரியப்படுத்துகிறேன். பரவசப்படுவதற்கு நான் மனிதப் பிறவியல்ல. அது என் இயல்பல்ல, தேவையுமல்ல. ஆயினும் நான் நினைவுகூர்ந்தாக வேண்டும். சொல்லென்பது ஓர் உயிர். உயிரென்பது உணர்ச்சியுள்ளது. அதிகபட்சம் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்றுதான் எப்போதும் எண்ணிக்கொள்கிறேன். என்னையறியாமல் சில தருணங்களில் தடுமாறிவிடுகிறேன்.
எண்ணிப் பாருங்கள். நான் சார்வாகனின் சிந்தையைக் கருதி அதில் ஒடுங்கியிருக்கிறேன். நிழலுக்கொரு தருவுமற்ற பொட்டல் வெளி போன்ற சிந்தை. அவன் பேசுகிறான். நிற்கிறான். நடக்கிறான். ஆவேசப்படுகிறான். நெகிழ்கிறான். கேட்பதற்கு பதிலளிக்கிறான். இயங்கவே செய்கிறான். ஆனால் எது ஒன்றும் அவனது சிந்தையில் இல்லை. எங்கிருந்தோ யாரோ அவனது சிந்தையைக் கருதி ஆக்கிரமித்து அவனை இயக்குகிறார்கள். அது எப்படி, எவ்விதமாக நிகழ்கிறதென்று தெரியாது. இதில் பொதிந்துள்ள உன்னதம் ஒன்றுண்டு. கண்காணாத் தொலைவில் உள்ள இமயத்தின் சாரலில் மந்திரவாதியொருவன் தனது காதலியுடன் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறான். அவன் பேசும் காதல் மொழிகளெல்லாம் இங்கே இவனால் சிந்தித்து அனுப்பப்படுகின்றன. அதையாவது என்னால் பெயர்த்தறிய முடிகிறதா என்றால் இல்லை. நான் இருப்பது வெற்றிடம். முற்றிலும் கழுவிக் கவிழ்க்கப்பட்ட மட்பாண்டத்தின் உட்புறம் நிகர்த்தது. என்னைத் தனது தவத்தால் நெருங்கப் பார்க்கும் மாயமுனிக்கு இன்னும் நான் சிக்கவில்லை. என்று அது நிகழ்கிறதோ, அன்று எனக்குள்ள இந்த வசதியும் ஒருக்கால் இல்லாது போகலாம்.
இத்தனை இக்கட்டுகளுக்கிடையில் பரவசப்படுவதற்கும் தருணங்கள் அமைவதன் பெயரென்னதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது நிகழவே செய்கிறது.









Add Comment