81. விடியும் பொழுது
அவனது சிரத்தில் நின்றிருந்த மயூரம் இரு முறை தனது அகன்ற சிறகுகளை உயர்த்தி இறக்கியது. என்ன என்று அவன் வினவினான்.
எனக்குப் பசிக்கிறது.
சொல்லிவிட்டு அது கீழே இறங்கி வந்து அவனுக்கு எதிரே நின்றது. அவன் புன்னகையுடன் தன் கரங்களைப் புதை பனியினின்று வெளியே எடுத்து நீட்டி அதன் முகத்தை வருடினான். அது நெருங்கி வந்தது. முதுகை வருடினான். மேலும் நெருங்கி வந்தது. தனது இடக்கரத்தை அதன் கண்டத்தினடியே நீட்டி, மேற்புறமாகச் சுருட்டி, வலக்கரத்தை முதுகில் கிடத்தி, அதன்மீது மெல்லத் தன் சிரத்தைச் சாய்ந்தான். அது அமைதியாக நின்றிருந்தது. சில நொடிகளுக்குப் பிறகு அவன் கரங்களை எடுத்தான். உண்ண என்ன வேண்டும் என்று கேட்டான்.
எதுவானாலும் சரி.
அவன் கண்களை மூடிக்கொண்டு மிக வேகமாக மூச்சை இழுத்து, சத்தமெழும் விதத்தில் மூன்று முறை சுவாசத்தை வெளியேற்றினான். இப்போது அவனெதிரே ஓர் இலையில் சில நத்தைகளும் இன்னோர் இலையில் தாமரை இதழ்களும் நான்கு கதலிகளும் தோன்றின.
அது கொத்தித் தின்னத் தொடங்கியது. விரைவாக ஏழெட்டு முறை கொத்தித் தின்று முன்பசி தீர்ந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தது. குனிந்து பழத்தைக் கொத்தி, ஏந்திக்கொண்டு அவனது அதரத்தின் அருகே கொண்டு வந்து ஊட்டிவிட்டது.











Add Comment