87. வைரம்
எப்போதோ ஒரு காலத்தில் அது புழக்கத்தில் இருந்த படித்துறையாக இருக்க வேண்டும். புதர்கள் அடர்ந்து, கற்கள் பெயர்ந்து, முற்றிலும் பாழடைந்திருந்தது. கரையோரம் வளர்ந்திருந்த தருக்கள், படித்துறையை நிறைத்திருந்த புதர்களின் மீது கவிந்து அழுத்திக்கொண்டிருந்தன. அவன் மிகுந்த சிரமத்துடன்தான் புதர்களை விலக்கிக்கொண்டு உள்ளே இறங்கினான். ஏழு கற்களின் மீது பாதம் பதித்துக் கீழே இறங்கி வருவதற்குள் நான்கு முறை தடுமாறி விழப் பார்த்தான். முதல் முறை அவன் விழுந்து விடாமல் வராகமொன்று தாங்கிப் பிடித்தது. அடுத்த இரண்டு முறை அவன் சரிய நேர்ந்தபோது இரண்டு நாய்கள் முட்டுக் கொடுத்துக் காத்தன. நான்காம் முறை இரண்டு கால்களும் சறுக்கித் தலை குப்புற நீரில் விழச் சென்றவனை ஒரு கரம் தடுத்து நிறுத்தியது. எதிரே உதுமானி நாயனார் நின்றுகொண்டிருந்தார்.
உட்கார். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்,
என்று சொன்னார்.
உனக்கு வேறு இடமே அகப்படவில்லையா? தஞ்சப்புரியில் படித்துறைகளுக்கா பஞ்சம்?
யார் சொன்னது? ஆனால் இங்கிருந்து நிசும்பசூதனியின் ஆலயத்துக்குச் செல்வது எளிது சார்வாகனே. அதனால்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்,
என்று நாயனார் சொன்னார்.
நீ உளறுகிறாய். கோயிலில் இருந்து அநேகமாக நாம் ஒரு காத தூரம் கடந்து வந்திருக்கிறோம்.











Add Comment