93. பிறவிப் பொருள்
முதலில் அவன் சிறிது குழப்பமுற்றான். பிறகு மெல்ல மெல்லப் பதற்றமடையத் தொடங்கினான். அவன் தவத்தில் இருந்தபோது ஒரு படிக்கல்லின் இடது ஓரத்தில் தென்பட்ட மெல்லிய இடைவெளியைக் கண்டான். அதன் வழியே அவனது சித்தம் ஊடுருவியபோது அங்கே சார்வாகன் இருந்ததை அறிந்துகொண்டான். அக்கணமே தனது தவத்தைக் கலைத்துவிட்டுப் பனிப்பாளங்களை உடைத்துக்கொண்டு எழுந்து வெளியே வந்தான். இவை நடந்தபோது அப்படிக்கல்லின் இரு புறங்களிலும் ரேகைகளினால் எழுதப்பட்ட வட்டங்களை அவன் காணவில்லை. இப்போது படித்துறைக்கு நேரில் வந்து காணும்போது, இரண்டு சிறிய வட்டங்கள் தென்படுகின்றன. ஆனால் அவன் எதிர்பார்த்து வந்த விரற்கடை அளவு இடைவெளியை எந்தக் கல்லிலும் காணவில்லை. எதனால் இப்படி நடக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.
சட்டென்று நிமிர்ந்து மேலே பார்த்தான். யாரும் காணவியலாத உயரத்தில் அவனது சிரத்துக்கு நேர்மேலே பறந்துகொண்டிருந்த மயூரம், அங்கிருந்து என்ன என்று அவனைக் கேட்டது.
அன்பே, இந்த இடம்தான் என்பதில் எனக்குச் சற்றும் ஐயமில்லை. ஆனால் நான் தவத்தில் கண்ட அடையாளத்தை இப்போது இங்கே காணவில்லை. மாறாக, தவமிருந்தபோது எனக்குப் புலப்படாத இரண்டு சிறிய மாய வட்டங்கள் இந்தக் கல்லின் மீது தென்படுகின்றன. இந்தக் குறிப்பினைக் கொண்டு உனக்கு ஏதேனும் தோன்றுகிறதா?











Add Comment