வயல்களின் எல்லையில், காற்றுக்கும் வெயிலுக்கும் மட்டுமே சாட்சியாக நிற்பவை அகேவ் என்னும் கள்ளிச்செடிகள். விவசாயிகளைப் பொறுத்தவரை அவை காட்டு மிருகங்கள் புகாமல் தடுக்க நடப்பட்ட முள்வேலிகள். ஆனால் அச்செடியின் கூம்புக்குள் ஒளிந்திருந்ததோ மெக்ஸிகோவின் ‘டக்கீலா’ மதுபானத் தொழிலைப் பதினைந்து பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றிய இனிப்பு நிறைந்த உயிர்ச்சாறு.
இந்த அகேவ் கள்ளிச்செடி, இந்தியாவின் தக்காண பீடபூமியின் வறண்ட மண்ணை உலகின் பொருளாதார வரைபடத்தில் புதிதாக இடம்பிடிக்கச் செய்திருக்கிறது. தக்காணத்தின் விவசாயிகளும் தொழில்முனைவோரும் செல்லமாக ‘நீலத் தங்கம்’ என்று அழைக்கும் இந்தப் பாலைவனத் தாவரத்தின் ரகசியம் தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் காந்துகூரில், மசபள்ளி வெங்கடேஷ் என்ற விவசாயி தனது பத்து ஏக்கர் நிலத்தில் தக்காளியும் நிலக்கடலையும் மக்காச்சோளமும் பயிரிட்டுக் கொண்டிருந்தார். 2010ஆம் ஆண்டில் ஒரு நாள், அறிமுகமில்லாத சில வணிகர்கள் அவரைத் தேடி வந்தனர். அவர்கள் தேடியது தக்காளியையோ மக்காச்சோளத்தையோ அல்ல. அவரது வயலின் வேலியாக நின்ற, அலட்சியமாக ஒதுக்கப்பட்ட ‘அகேவ் அமெரிக்கானா’ என்ற கள்ளிச்செடியை.
















Add Comment