94. முதல் மனிதன்
அவன் நெடுநேரம் கருவூர்ச் சித்தரைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தான். அவன் மனத்தில் பிரமிப்போ, வியப்போ உருவாகவேயில்லை. அது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அவரைக் குறித்து எண்ணும்போதெல்லாம் வினோதமான உணர்வொன்று அவனை ஆட்கொண்டதை அறிந்தேன். வாழ்வில் அப்படியொரு சித்தருடனும் அவரது மாணாக்கர்களுடனும் பழக நேரிடுமென்று அவன் எப்போதும் சிந்தித்ததில்லை.
அவன் தனது பிராயம் அறியாதவன். ஆனால் நினைவறிந்த நாள் முதல் தன்னைப் பொருட்படுத்தி யாரும் தொடர்ச்சியாகச் சில மணித்துளிகள்கூட உரையாடியதில்லை என்பதை நினைவுகூர்ந்தான். சிறு பிராயத்தில் பிட்சை என்று கையேந்தினால் சில வீடுகளில் உணவளிப்பார்கள். எப்போதேனும் யாராவது உடுத்திக் களைந்தெறிந்த வேட்டியைக் குச்சியில் ஏந்தித் தூக்கி வந்து அவன் மீது எறிந்துவிட்டுப் போவார்கள். அதைத் துவைத்து, இரண்டாகக் கிழித்து வைத்துக்கொண்டு பயன்படுத்துவான்.
தானம் பெற்ற வேட்டியை இரண்டாகக் கிழித்து உடுத்துபவனது வாழ்க்கை கிழிந்ததாகவேதான் எப்போதும் இருக்கும் என்று ஒரு நாள் யாரோ ஒருவர் முகம் சுளித்தபடி சொல்லிவிட்டுச் சென்றார். அன்று முதல் வேட்டியை இரண்டாகக் கிழிப்பதை விடுத்து, நான்கு துண்டுகளாக்கி இடுப்பில் சுற்றிக்கொள்ளத் தொடங்கினான். ஒரு நாள் அணிவதற்கு வேட்டித் துண்டம் இல்லாததால், உடுப்பின்றிப் பிட்சைக்குச் சென்றான். அன்றெல்லாம் குடந்தை மக்கள் அவனைக் குச்சிகளாலும் கற்களாலும் அடித்துத் துரத்திக்கொண்டே இருந்தார்கள். தப்பிக்கும் பொருட்டுக் கும்பேசுவரர் கோயிலுக்குள் நுழைந்தவனை அங்கிருந்த சிவ பண்டிதர்களும் பக்தர்களும் வெளியேறச் சொல்லி மிரட்டினார்கள். உலகைக் காக்கும் ஈசனே, இச்சிறுவனுக்கொரு கோவணத் துணியைத் தர மாட்டாயா என்று கதறியபடி கருவறையை நோக்கி அவன் ஓடியபோது யாரோ ஒருவர், அடேய் நில், நில் என்று அதட்டியபடி ஓடி வந்து, தடித்த கழியால் அவன் சிரத்தின் மீது ஓங்கி அடித்து விழச் செய்தார்.











Add Comment