கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த திமுக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் இப்போது சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எழுபத்தேழு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவுக்குத் தேர்தல் தோல்விகள் புதிதல்ல. ஆனால் அத்தேர்தலில் திமுகவுடன் கொள்கைக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும், தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே தவெக பக்கம் தாவிவிட்டன. இந்தச் சிக்கல் இதுவரை அக்கட்சி சந்தித்திராதது.
1962இல் திமுக, முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. 1967ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரை, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தார். அப்போது தொடங்கி, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வந்துள்ளது.
இந்தக் கூட்டணிகளில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி தொடங்கி, கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக், இந்திரா காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல சிறிய, சாதியப் பின்புலம் கொண்ட கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்தக் கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறியும் இருக்கின்றன.
















மெட்ராஸ் பேப்பர்
நம் குரல்
இவ்வார இதழின் நம்குரல் தி.மு.க வின் தோல்விக்கான
காரணங்களை ஆராய்ந்து பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் இதை
சம்மந்தப்பட்டவர்கள் படிப்பார்களா என்று தெரியாது. கலைஞர்
செய்தித்தாள்களை தினமும் படித்து அதில் உள்ள செய்திகளை
உள்வாங்கி அதற்கேற்ப செயல்படுவார். அவருக்கு டிஜிட்டல்
வடிவத்திலும் ஆர்வம் உண்டு. உயிரோடிருந்தால் மெட்ராஸ் பேப்பரை
நிச்சயம் படிப்பார்.
தேர்தலில் த.வெ.க வெற்றி அவர்களே எதிர்பார்த்திராத ஒன்றுதான். கூட்டணி இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை
என்பதால்தான் விஜய் தொடக்கத்திலேயே ஒத்த கருத்துள்ளவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்ற உத்தரவாதத்துடன்
அழைப்பு விடுத்தார். அனைத்து கட்சிகளும் யோசித்தன. ஆனால் தி.மு.கவுடன் இருந்த கூட்டணி கட்சிகள் கடந்தகால மக்கள் நலக் கூட்டணியின் அனுபவத்தை நினைத்துப்பார்த்து பழைய கூட்டணியில் தொடர முடிவெடுத்தனர்.
தி.மு.கவும் கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் நடந்துகொண்ட விதம் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதை ஊடகங்களில்
அவர்கள் பேட்டியின்போது கண்டோம். இவையெல்லாம் சேர்ந்துதான்
அக்கட்சிகளை தி.மு.கவை விட்டு விலக வைத்தன. மேலும்
அதிகாரத்தில் பங்கு என்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள்?
மக்கள் மாற்று இல்லாமல் இரண்டில் ஒன்று இருந்ததையே
தேர்ந்தெடுத்தார்கள். மாற்று ஒன்று இருக்கும் போது அந்த காலத்தில்
தி.மு.கவை அக்கால இளைஞர்கள் எப்படி ஆதரித்தார்களோ
அப்படியே இப்போது நடந்திருக்கிறது.
தி.மு.க தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகைகளில் எழுதுவதை அலட்சியப்
படுத்தாமலும் கட்சியின் பொறுப்பாளர்கள் சொல்வதை முழுமையாக
நம்பாமலும் கட்சியை வலுப்படுத்த திட்டமிட வேண்டும்.
வரும் இடைத்தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தோல்வியே கண்டாலும்
தன் சுயபலம் என்ன என்பதை கணித்தால்தான் அடுத்த கட்டத்திற்குச்
செல்ல முடியும்.
மெட்ராஸ் பேப்பரின் நம் குரல் எப்போதும் நடுநிலையாளர்களின்
குரலாகத்தான் ஒலிக்கிறது.
பாபநாசம் நடராஜன்