மலேசிய மகத்துவம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2001-ஆம் ஆண்டு மாநாடு நடந்தது. இப்பணியில் முத்துவுடன் ஆரக்கிள் நிறுவனத்தில் அவரோடு பணிபுரிந்த நண்பர் ராஜ்குமாரும் இணைந்துகொண்டார். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியா கொஞ்சம் பெரிய நிலப்பரப்பு. தமிழர்கள் நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர்களை மாநாட்டுக்கு வரவைக்க வேண்டுமெனில் முதலில் அந்தத் தகவல் நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கும் சென்றுசேர வேண்டும். அதுதான் முதல் சவால்.
அதற்கு மூன்று திட்டங்கள் வகுக்கப்பட்டன. ‘எட்டில் இணையம்’ (web@8) திட்டம் அதில் ஒன்று. எட்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குக் கணினி தொடர்பாக ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொடுத்தார்கள். கணினியை இயக்கி முறையாக ஷட் டவுன் செய்யக் கற்றுக் கொண்டால்கூடப் போதும். இத்திட்டம் பெற்ற வெற்றியால் இத்திட்டத்தைச் செயல்படுத்திய குணசேகரன் அரசு சாராத் தன்னார்வ அமைப்பின் மூலம் இதைத் தொடர்கிறார். இன்றும்கூட மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் கணினி, இணையம் போன்றவற்றை அறிமுகம் செய்து வைக்கிறார்.
அடுத்து பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கான ‘பதினாறில் இணையத்திறன்’ (eSkills@16) திட்டம். மலேசியா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், கணினிப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இணையம், மின்னஞ்சல் பற்றிய வகுப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் மாநாட்டு இலச்சினையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பயிற்சி நிறுவனங்கள் சொந்தச் செலவில் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். தங்கள் பயிற்சி நிறுவனத்துக்கு விளம்பரம் கிடைப்பதுடன் நாடு முழுக்க நடக்கும் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ளும் ஆர்வத்தில் பயிற்சி நிறுவனங்கள் இதைச் செய்தன.
Add Comment