21 ஆட்சியதிகாரத்தின் மொழி
தூரத்தில் தெரியும் வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும். போய்ச் சேர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் முரசு அஞ்சல் நிறுவிய திட்டம் அச்சமயத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைவிடச் சிறிய திட்டப்பணிகள் சிலதும் முரசு சிஸ்டம்ஸ் செய்தது. ஒரு சில மாதங்களுக்கு அந்த வருவாய் போதுமானதாக இருக்கும். அதற்குள் வேறொரு புதிய திட்டப்பணி ஆரம்பித்துவிடும். இச்சமயத்தில் சிங்கப்பூர் அரசின் திட்டப்பணி ஒன்றுக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அடுத்த நிலைக்குச் செல்வதற்கான வழி புலப்பட்டது.
முத்து, சிங்கப்பூரில் பதிவு செய்த தனியார் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். சிங்கப்பூரில், மற்ற மென்பொருள்களுடன் முரசு செயலியை விநியோகம் செய்து கொண்டிருந்த அலுவலகத்தை நடத்தியவர், ஜே (ஜெயந்தி). அவர், முத்துவின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துகொண்டார். ஒரு நாட்டின் ஆட்சியதிகாரத்தில் தமிழ் மொழி ஏறும்போது அது திறந்துவிடும் கதவுகள் ஏராளம். சிங்கப்பூர் அரசுக்காகச் சில பணிகள் செய்யும் வாய்ப்பு முத்துவுடைய நிறுவனத்துக்கு அவ்வப்போது கிடைத்து வந்தது. அவற்றில், சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழை நிறுவக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியானது மிகப்பெரிய திட்டப்பணி.
ஜே, முத்து, இருவரும் சேர்ந்து இரவு, பகல் பாராது பணி செய்து ஒப்பந்தப்புள்ளியைத் தயாரித்தனர். மற்ற எல்லாரையும் விட அதிக விலை குறிப்பிட்டிருந்தனர். நியாயமாக அவர்களுக்கு அந்தப் பணி கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. அங்குதான் ஒரு திருப்பம்.
Add Comment