27. எழுத்துரு அழகியல்
உலகத் தமிழர்களின் அன்புக்குரிய இணைமதி எழுத்துருவில் 18 குறைகள் இருக்கிறதென ஆப்பிள் நிறுவனம் திருப்பி அனுப்பியதை முன்னரே குறிப்பிட்டோமல்லவா! அதைப்போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சிவபக்தரான இலங்கைத் தமிழர் ஒருவர் தனக்குத் தனித்துவமான எழுத்து வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார். எதேச்சையாக முத்துவும் அவரும் பேசிக் கொண்டனர். பேச்சினூடே தன்னுடைய எழுத்துரு ஒன்றைக் குறிப்பிட்டு நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு இது ஏற்றதாக இருக்குமே என்றார் முத்து. “இல்லை, இல்லை… அது ரொம்ப மோசம். கண்டிப்பாக வேண்டாம்” என்று மறுத்துவிட்டார்.
ஆப்பிள் நிறுவனம் கொக்கி, கொம்புகளின் நீளம் அகலம் குறித்துக் குறைசொல்லி அதைத் திருத்திய நிகழ்வோடு இந்த நிகழ்வும் முத்து அதுவரை பார்த்த கோணத்தை மாற்றியது எனலாம்.
எழுத்துரு உருவாக்கும் பணி என்பது அ, ஆ, இ, ஈ வரைந்து அதைக் கணினியில் ஏற்றுவது மட்டுமன்று. சமூக இடைவெளி மாதிரி எழுத்துகளுக்கும் இடைவெளி தேவை. அது சரியான அளவில் இருக்க வேண்டும். எழுத்தின் இடதுபுறமும் வலதுபுறமும் ஒரே அளவு இடைவெளி கொடுப்பது ஆரம்பக்கால வழக்கம். பொறியாளர் அப்படித்தான் சிந்திப்பார். இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் 5 புள்ளிகள் இருக்கிறதா என்று கணினி அளவுகோலில் அளந்து சரியாக இருந்தால் திருப்தியடைவார்.
Add Comment