ஒரு கையெழுத்து பல கோடி மக்களின் தலையெழுத்தை ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்தே, சிறிது கூட கவலையோ பரிதவிப்போ இல்லாமல் அதைச் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர்.
சென்ற வருடத்தில் மட்டும் அமெரிக்கா, தன் பன்னாட்டு நிறுவனத்தின் (USAID) மூலம் $7.2 பில்லியன் பணத்தை உலகின் பல நாடுகளுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்திருக்கிறது. அந்த நிதியைத்தான் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் நிறுத்தியிருக்கிறார். நமக்கு ஒரு மாத ஊதியம் வரவில்லை என்றால் நம் குடும்ப பட்ஜெட் எப்படித் தடுமாறும்? அப்படியிருக்க, பல்லாயிரக்கணக்கான கோடி நிதி நிறுத்தப்படுகிறது. எனில், பல நாடுகள் எப்படித் தடுமாறும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
பதறி அடித்து மக்கள் உரிமை அமைப்புகள் கேட்டுக்கொண்டன. உலக அமைப்புகள் கேட்டுக் கொண்டன. அதன் பின், உயிர் காக்கும் மருத்துவ அமைப்புகள் உணவுப் பொருள்கள், மற்றும் அத்தியாவசியமான பொருட்களுக்கான தடை நீக்கப்பட்டது.
இந்த இடைக் காலத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பசியால் வாடினர். சூடானில் மட்டும் 280000 குழந்தைகளுக்கான உயிர் காக்கும் சிகிச்சைக்கான மருந்துப் பொருள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சுத்தமான குடிதண்ணீருக்கான வசதிகளும் கூட நிறுத்தப்பட்டன.
Add Comment