ஒரு தக்காளிப் பழம் காணாமல் போய்விட்டது.
“என்னது, தக்காளியக் காணோமா?” தகவல், உலகச் செய்திகளின் பேசுபொருளாகிவிட்டது. விண்வெளியில் இயங்கும் ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில்’ பயிரிடப்பட்டு, அறுவடை செய்தெடுத்த அரும்பெரும் தக்காளிப் பழம் போன இடமே தெரியவில்லை. ஃப்ரான்க் ரூபியோ என்கிற விஞ்ஞானி , கிளி வளர்ப்பது போலப் பக்கத்தில் நின்று வளர்த்த செடி அது.
“ரூபியோ தக்காளியைச் சாப்பிட்டு விட்டாரா?” கேலியும் கிண்டலுமாகக் கழிந்தன விண்ணுலக நாட்கள். ரூபியோ தனது ஒரு வருடப் பயணத்தைப் பூர்த்தி செய்து, பூமிக்குத் திரும்பியும் விட்டார். ஆனால் தக்காளி மர்மம்தான் தெளியவே இல்லை. பல மாதங்கள் கழித்து, 2023 டிசம்பரில், ISS-இல் இருந்தவர்கள் திடீரென்று அதனைக் கண்டெடுக்கிறார்கள். கூச்சலும் கும்மாளமுமாக, பூமிக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள்.
நடந்தது இதுதான். ISS, விண்ணில் இயங்கும் ஆய்வுக்கூடம். சுமார் நாலரை இலட்சம் எடை கொண்ட, பறக்கும் கப்பலின் தோற்றத்தைக் கொண்ட விண்ணோடம். கிட்டத்தட்ட, ஆறு அறைகளைக் கொண்ட பணக்கார பங்களாவின் அளவுக்குப் பெரிய உட்பரப்பைக் கொண்டது.
Add Comment