லியோவைவிடப் பெரியது மியோ
“ஜிங்கல் பெல்ஸ்
ஜிங்கல் பெல்ஸ்
ஜிங்கல் ஆல் த வேய்”
விண்வெளியில் முதன்முதலாக ஒலித்த பெருமைக்குரிய பாடல் வரிகள் இவை. 1850-இல் இயற்றப்பட்டு உலக மக்கள் அதிகமானோருக்கு மிகப் பரிச்சயமான அமெரிக்கக் கிறிஸ்மஸ் கீதம். 1962-ஆம் ஆண்டில் கிறிஸ்மஸின் போது, ‘ஜெமினி-06’ என்கிற செய்மதி மூலமாக அண்டவெளியிலிருந்து இசைக்கப்பட்டது. கிறிஸ்மஸ் பண்டிகைதான் எத்துணை சிறப்பானது! உலகின் முதலாவது தொடர்பாடல் செய்மதி விண்ணுக்குப் போனதும், அதே கிறிஸ்மஸ் காலமொன்றில்தான்.
1958 அக்டோபர் முதலாம் திகதி, நாஸா நிறுவனத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டேவிட் ஈசன்ஹோவர் கையெழுத்திடுகிறார். அதுவரை காலமும் NACA என்ற பெயரில், குறைந்தபட்ச அதிகாரங்களுடனும், குறைந்தளவு பட்ஜெட்டிலும் இயங்கி வந்த அமெரிக்காவின் ‘ஏரோநாடிக் ஆராய்ச்சி நிறுவனம்’ NACA இனிமேல் புதுப் பொலிவுடன் விண்ணை மட்டும் இலக்காகக் கொண்டு NASA-வாக இயங்கும். NACA வின் பழைய பணிக்கூற்றை மாற்றி,
“சமாதான வழியில் நிகழும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான மையம் “என்பதாகத் தன்னை உலகிற்கு அறிவித்துக் கொள்கிறது நாஸா. அமெரிக்கா போகுமிடமெல்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் கடைப்பிடிப்பது எத்துணை மகிழ்ச்சிகரமானது!
Add Comment