எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-x நிறுவனத்துக்கு ஓர் எட்டுப் போய்ப் பார்த்தால், ஒன்று புரியும். அங்கே அவரது அறையின் முகப்புப் பகுதியில் ஆளுயரப் படங்கள் இரண்டைச் சுவரோவியமாக வரைந்திருப்பார்கள். ஒன்று, சிவப்பு நிறத்தில் தகதகக்கும் செவ்வாய்க்கிரகம். அடுத்தது, நீல நிறத்தில் ஜொலிக்கும், அதே செவ்வாய்கிரகம்! அவரது இலக்கு, செங்கோளான செவ்வாயை வசப்படுத்தி, பூமி போன்று நீர் வளமுள்ள கோளாக மாற்றுவது. அதனைத்தான் சுவரில் திட்டவட்டமாகத் தீட்டி வைத்திருக்கிறார்.
பின்னே, இல்லாமல் முடியுமா? பூமியின் ஜனத்தொகை நொடிக்கு நொடி பெருகிக்கொண்டு போகிறது. ஆனால் வாழ்வதற்கான நிலமோ இம்மியளவும் அசைவதில்லை. உண்மையைச் சொல்வதென்றால் கடலரிப்பினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் வாழ்தகவுள்ள நிலப்பரப்பு, குறைந்து செல்கிறது. நிலைக்குத்தாக நகரும் புது வாழ்வியலுக்கு எல்லைகள் எதுவும் இல்லை. வானைத் தொடும் கட்டடங்கள் தாண்டி, செவ்வாயைத் தாண்டி, சூரியன்வரைகூட ஒரு கை பார்த்து விட வேண்டிய காலமிது.
Add Comment