என் முதல் புத்தகத்தைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ட தருணத்தோடு தொடங்கியது 2024 ஆம் ஆண்டு. ‘யுத்த காண்டம்’ ஜீரோ டிகிரி அரங்கில் வைக்கப்பட்டிருந்ததை என்னைப் போலவே என் குடும்பத்தினரும் ஆவலுடன் பார்வையிட்டனர். ஆசிரியர் கையால் என் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த புகைப்படத்தை, பொக்கிஷமாகச் சேர்த்து வைத்துள்ளேன்.
வாசகராகச் சென்று பழக்கப்பட்ட எனக்கு, ஓர் எழுத்தாளராகச் செல்வது விவரிக்க இயலாத மகிழ்ச்சியை அளித்தது. அவரவர் சொந்த வீட்டு விசேஷங்களில் கடைசி பந்திவரை காத்திருந்து உணவருந்துவோமே, கிட்டத்தட்ட அதுபோல. ஒருவர் என்னிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார். அதற்குப் பேனா கொடுத்து உதவியவரும் ஆசிரியரே. என்ன எழுதினேன் என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் என்றும் நினைவிலிருக்கும் அந்த முதல் கையெழுத்து.
நிற்க. இந்த உணர்வுகள் எல்லாம் என்னோடு மட்டும்தான். புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த ஒருவருக்குக் கூட நான் எழுத்தாளர் என்பது தெரியாது. என் பதிப்பாளரையே அங்கு தான் முதல்முறை சந்தித்தேன். பார்க்க சாதுவாகத் தானே இருக்கிறீர்கள், பிறகு ஏன் யுத்த காண்டம் எல்லாம் எழுதுகிறீர்கள் என்று வேடிக்கையாகக் கேட்டார். என்ன செய்ய, இன்றுவரை இந்தக் கேள்வியும் ஓயவில்லை. எனக்கு இது பிடித்திருக்கிறது என்பதைத் தவிர, என்னிடமும் வேறு பதிலுமில்லை.
பல்வேறு வாசகர்களையும், பதிப்பாளர்களையும் கவனித்தது, புத்தகக் கண்காட்சி குறித்த என் புரிதலை அதிகரித்தது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஒவ்வொருவருக்கும் வேறுபடும் விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்து கொண்டேன். வருடத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் இந்த முழு வருடத்துக்கும் சத்து மருந்தாக அமைந்தது. அதற்கு முன்னரே திறக்க முடியாத கோட்டைத் தொடரை எழுதத் தொடங்கியிருந்ததால், சீராகச் சென்று கொண்டிருந்தது என் எழுத்துப் பயணம்.
Add Comment