மனித நாகரிகத்தின் ஆரம்பக் கட்டங்களில் தேசங்கள் இல்லை. மக்கள் பெரும்பாலும் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். அது நகர அரசுகளாகி, சமஸ்தானங்களாகி, பின்னர் வலிமையான தலைவர்களின் கீழ் பேரரசுகளாக உரு மாறியது. அப்போதும் மக்களிடம் தேச உணர்வு குறைவாகவே இருந்தது. அதன் பிறகு நடந்த புரட்சிகளால் அதிகாரம் மன்னர்களிடமிருந்து மக்களுக்குக் கைமாறியபோது தேசம் என்னும் சிந்தனை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
கலாசாரம், மொழி, வரலாறு ஆகியவை மக்களை ஒரே தேசமாகச் சிந்திக்கச் செய்தன. உலகப்போர்கள் இந்த உணர்வை மேலும் வலுவாக்கின. இன்று நாம் பார்க்கும் உலக வரைபடம், எல்லைகளை மாற்றிய போர்களையும், ஆட்சிகளை மாற்றிய புரட்சிகளையும் கொண்டே வரையப்பட்டுள்ளது. இந்த உலக வரைபடம் எப்போதும் மாறுதலுக்குட்பட்டது.
பெரும்பான்மைக் குடிகளின் அடையாளமும், சிந்தனையும்தான் அந்தத் தேசத்தின் வரைபடத்தைத் தீர்மானிக்கிறது. இந்த அடையாளத்துடன் ஒத்துப்போக முடியாதவர்கள் இன்னொரு அடையாளம் கொண்ட கணிசமான மக்களைத் திரட்டி தனி நாடு கோரிப் போராடுவதும், அதைப் பெற்றதும் வரலாறு நெடுகப் பார்க்க முடிகிறது. ஆனால், சிந்தனையளவில் ஒத்துப்போக முடியாதவர்களால் என்ன செய்ய முடியும்?














Add Comment