சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருபுறமும் வீற்றிருந்தார்கள். நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும் நண்பர்கள் மூவரும் பிரியவே இல்லை. உலக உருண்டையில் மேற்குலகம் மட்டுமே பெயர்பெற்ற நிலையில், இதோ வந்து விட்டது தெற்குலகு என்று அறிவித்திருக்கிறது பிரிக்ஸ் மாநாடு. இவர்களை வலுப்படுத்தக் கிழக்கும், மத்திய கிழக்கும் சேர்ந்திருப்பது மேற்குலகிற்கான எச்சரிக்கை.
பிரிக்ஸ் (BRICS) கூட்டணியின் பதினாறாவது உச்சிமாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்றது (22-24 அக்டோபர்). உறுப்பினர்களான ஒன்பது நாட்டின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். கூடவே இதில் சேர விண்ணப்பித்திருக்கும் முப்பது நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டது, உலக அரங்கில் இதன் முக்கியத்துவத்தை உறுதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவின் தோழனும், நேட்டோ உறுப்பினருமான துருக்கியும் அடங்கும்.
வரவேற்க வைத்திருந்த தின்பண்டங்களில் தலைவர்களை அதிகம் கவர்ந்தது சக்-சக் போல. கோதுமை மாவுடன் தேனும், சர்க்கரையும் கலந்து செய்த தித்திக்கும் பண்டம் இது. ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதை ரசித்துச் சுவைத்தவாறே, பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பொறாமைப்பட வைத்தது இவரின் ரஷ்ய வருகை. உக்ரைன் வகுத்திருந்த சமாதான அறிக்கையை கண்டுகொள்ளாத குட்டெரெஸ், ரஷ்யாவிற்கு நேரில் வந்திருப்பதும் காரணமாகத்தான். போர் தொடங்கிய 2022 ஆம் ஆண்டு, உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு அனுமதி வாங்கித் தந்திருந்தவர் குட்டெரெஸ். கருங்கடலை உலகின் உணவு மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்குத் திறந்து வைப்பது, அனைவருக்கும் முக்கியம்.
Add Comment