ரத கஜ துரக பதாதிகள் சூழ அக்கால மன்னர்கள் போருக்குச் செல்வது போன்று கென்யாவின் அதிபர் வில்லியம் ரூடோ சமீபத்தில் அமெரிக்க அதிபரைச் சந்திக்க முப்பது பேர் கொண்ட குழுவுடன் – அவரது மனைவி, மகள் மற்றும் ஒரு நகைச்சுவை நடிகரும் அடக்கம் – ஒன்றரை பில்லியன் மதிப்புள்ள போயிங் 737 ஆடம்பர ஜெட் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்றுவந்துள்ளார்.
‘பறக்கும் அதிபர்’ என்று கென்யாவில் ரூடோவிற்கு ஒரு பட்டப்பெயரும் உண்டு. பதவி ஏற்ற நாளிலிருந்து, ஐம்பது வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு விட்டார். ஒரு மாதத்திற்கு மூன்று பயணம் என்ற அளவில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார். “மக்களை ஒரு பக்கம் திண்டாடவிட்டு, இப்படியான ஆடம்பர பயணங்கள் தேவையா? அதுவும் ஒரு நகைச்சுவை நடிகருக்கு அங்கென்ன வேலை.?” என்று ஒருபுறம் மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால் ரூடோவின் வாதம் ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு பின்னர் கென்ய அதிபர் அமெரிக்காவுக்கு வருகிறார் என்றால், கெத்தாக இருக்க வேண்டாமா..? ஆடம்பர விமானத்தில் கென்ய அதிபர் வந்தார் என்பது கென்யாவுக்கு அல்லவா பெருமை? தவிரவும் இதன் மூலம் மொத்த ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதியாகவே ரூடோ காணப்படுவார் என்பது அவரது வாதம்.
தன் தொழிலதிபர் நண்பர்கள் நலனுக்காக மட்டுமே வெளிநாடுகளக்கு ஆடம்பர பயணம் மேற் கொள்ளும் மற்ற பிரதமரை விட கென்ய அதிபர் எவ்வளவோ மேல்