இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சென்னை வந்தார். அப்போது பர்சனல் செக்யூரிட்டி ஆபீசராகப் பாதுகாப்புப் பணியில் இருந்ததைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார் ஏ.வி.உஷா. 1973-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முதலில் பணியில் அமர்த்தப்பட்ட பெண் காவலர்களில் இவரும் ஒருவர். அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு பெண் தலைமைக் காவலர், 20 பெண் காவலர்கள்- . மொத்தம் 22 பெண்கள் பணியில் இணைந்தார்கள். இந்த வருடம் இந்நிகழ்வின் பொன்விழா ஆண்டு.
உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து தற்போது பணி ஓய்வில் இருக்கும் உஷா, காவலர் பணி தனக்கு மரியாதையைப் பெற்றுக் கொடுத்தது என்கிறார். “காவல் படையின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி. இது ஒரு பெருமைமிகு தருணம்” என்கிறார் லத்திகா சரண். இவர் சென்னையின் ஒரே பெண் போலீஸ் கமிஷனராகவும், மாநிலக் காவல் படை டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றிவர்.
இதையொட்டி நடந்த பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்வில் முதல்வர் ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ரோல் கால் நேரம் 8 மணியாக்குதல், தங்கும் விடுதிகள், கழிவறை வசதியுள்ள ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், கருணாநிதி பெயரில் பணி விருது, துப்பாக்கி சுடும் போட்டிகளும் பரிசுகளும், குடும்பச் சூழலுக்கு ஏதுவான பணியிட மாறுதல்கள், வழிகாட்டும் ஆலோசனைக் குழு ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர். ஆண்டுதோறும் “காவல் துறையில் பெண்கள்” எனும் தேசிய மாநாடு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பெண் காவலர்களின் தேவைகள், சிக்கல்கள், செயல்திறன் பற்றி இதில் கலந்தாலோசிக்கப்படும். பெண் காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன இந்த அறிவிப்புகள்.
Add Comment