சீனாவின் வல்லமைமிகு அதிபராகக் கருதப்படுபவர் ஜி ஜின்பிங். இவர் சமீப காலமாக அவ்வப்போது காணாமல்போவதும், முக்கியமான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காததும் உலக நாடுகளின் பார்வையை அவரது பக்கம் திருப்பியுள்ளது. ஜின்பிங்குக்கு எதிராகச் சதி நடப்பதாகவும், சீன அரசியலிலிருந்து அவரை ஓரங்கட்ட முயல்வதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. உண்மையில் சீன அரசியலில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
கடந்த ஜூன் 24ஆம் தேதி நியூசிலாந்து, சிங்கப்பூர் பிரதமர்களைச் சந்தித்தார் ஜின்பிங். அதன் பின்னர் சுமார் இருபது நாள்கள் காணாமல் போனார். ஷான்சி மாகாணத்தில் ஜூலை ஏழாம் தேதியன்று ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஜின்பிங் மரியாதை செலுத்துவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது சீன அரசின் செய்தி ஊடகம். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டது என்பது தெளிவு. ஆனால், இறுக்கமான சூழலைப் பிரதிபலித்த அப்புகைப்படம், தெளிவுக்குப் பதில் மேலும் சந்தேகத்தையே ஏற்படுத்தியது.
குறிப்பாக, பிரேசிலில் ஜூலை ஆறாம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில்கூட அவர் பங்கேற்காதது பெரும் பேசுபொருளானது. அதோடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களும், ஐம்பது செல்வாக்குமிக்க அமைச்சர்களும் பங்கேற்ற வருடாந்திர அரசியலமைப்பு விழாவிலும் ஜின்பிங்கைக் காணவில்லை. சர்வாதிகாரத்தால் நுட்பமாகக் கட்டமைக்கப்பட்ட சீன அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகளை அலட்சியப்படுத்துவதற்கில்லை. இதற்கு இரண்டு அர்த்தங்கள்தான் உண்டு. ஒருவேளை இது திட்டமிட்ட உத்தியாக இருக்கலாம். அல்லது சீன அரசியலில் உருவாகியுள்ள நிலையற்ற தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.













Add Comment