மழை வலுத்திருந்தது.
மின் நிலையத்தில் போதிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் கிளம்புவதற்குள் நன்கு இருட்டியிருந்தது. ஒரு சுற்று மேலணைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு வீட்டிற்குச் செல்லலாமா என்று யோசித்தேன்.
“இந்தக் கனமழை இரவில், காட்டுச்சாலையில் பயணம் போகும் அந்த சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்” என்றது மனது. காரணம் ஏதுமேயின்றி சட்டென்று தொலைபேசியில் ஒரு குறுஞ்சண்டை போட்டு பின்மதியப் பேருந்திலேயே சுலக்ஷணா, குழந்தையோடு கோவைக்குப் போனதும் வீட்டிற்குப் போவதற்கான காரணங்களைக் குறைத்தன. லேசான பசியும்.
ஜீப்பை எடுத்து மின் நிலையத்திலிருந்து வெளிவந்து, இரண்டாவது வளைவில் திரும்பி நாயர் மாமா கடையில் விளக்கெரிகிறதா என்று பார்த்தேன். கொல்லையில் ஒளி தெரிந்தது. மெல்லிய ஹாரனுடன் கடைக்கு முன்னால் நிறுத்தினேன்.
“கொச்சு வரணும்” என்று மழையோசையினூடே மாமாவின் கிண்ணென்ற குரல் ஒலித்தது.
ஒற்றைக் கதவைத் திறந்து “அடிச்சுப் பொளிக்கினில்லே” என்றார்.
very good one sir.