குசேலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ரொம்பக் கஷ்டப்பட்டு ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார். உயிரைப் பணயம் வைத்து எடுத்துக் கொண்ட அந்தப் படம் உள்ள செல்பேசி தொலைந்து போய் விட்டால் எப்படியிருக்கும்? 2008-இல் அந்தத் திரைப்படம் வந்த காலத்தில் இன்றுள்ள அளவுக்குப் பலரிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. இப்போது நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது சதவீதம் பேரை அதுதான் ஆள்கிறது.
வீட்டில் கணினி இருக்கும். கையில் போன் இருக்கும். அனைத்து ஆவணங்களுக்கும் கிளவுடில் ஒரு பிரதி இருக்கும். இருந்தாலும் பலர் பலவற்றைத் தொலைத்து விட்டுப் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைவதையும் காண்கிறோம். எதனால் இப்படி?
பெருந்தொற்றுக் காலத்தில் அநேகமாக எல்லா கிராமப்புற வீடுகளிலும்கூட கணினி அல்லது செல்போன் வந்துவிட்டது. பிள்ளைகளின் படிப்பு அதற்குக் காரணம். வீட்டில் இருந்தே வேலை பார்க்க வசதியாகப் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கின. இந்த இரு காரணங்களால் கணினி என்பது அரிசி, பருப்பு போன்றதொரு பொருளாகிப் போனது. ஆனால் எவ்வளவு பேர் அதைச் சரியாகப் பராமரிக்கிறார்கள்? அலுவலகக் கணினி என்றால் அதற்கெனவே இருக்கும் விண்டோஸ் வல்லுநர்களின் கண்காணிப்பு இருக்கும்.
Add Comment