வருடம் ஒன்று உருண்டோடி முடியும் போது அந்த வருடத்தில் என்ன என்ன செய்தேன் என்று சுயபரிசோதனை செய்து கொள்வதைவிட வயது ஒன்று கழிகிறதே என்றுதான் எனக்கு பிரச்சினையாகிவிடுகிறது. என் காதருகே கொஞ்சம் நரை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்க திடீர் திடீர் என்று விபரீதக் கவலைகள் சூழ ஆரம்பித்து இருக்கின்றன. தெனாலி கமலஹாசனுக்கு எதற்கெடுத்தாலும் பயம் போல எனக்கு வயது போவதை நினைத்தாலே ‘கலக்கம்’ வந்து நெஞ்சில் அமர்ந்து விடுகிறது.
2048ம் ஆண்டு இலங்கை அபிவிருத்தியடைந்த ஒரு நாடாகும் என்றார் முன்னாள் ஜனாதிபதி ரணில். எங்களுக்கு ரணில்- ராஜபக்சேக்கள் அமைந்தது போல பாகிஸ்தானிற்கு ஷெரீப்கள் வாய்த்திருக்கிறார்கள். அவர்கள் 2075ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னேற்றமடைந்த நாடாகும் என்று அடித்துவிட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் உருப்படுவது அல்ல என் பிரச்சினை. எப்படித்தான் இப்படி எல்லாம் இன்றிலிருந்து இருபது வருடம் கழித்து, ஐம்பது வருடம் கழித்து என்று இவர்கள் சமூஸாவையும் டீயையும் ருசித்தவாறு யோசிக்கிறார்கள் என்றுதான் அச்சமாய் இருக்கிறது. காரணம் முதுமை, மூப்பு, என்று யோசிக்கும் போது அது எனக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது.
இளமை கரைகின்றது என்று ஒரு விநோதக் கவலை. பொறுப்பான தந்தையாய் எப்படி மகளுக்கும் மகனுக்கும் உலகத்திலே சிறந்த கல்வியைக் கொடுக்கப் போகிறேன் என்று நெற்றிச் சுருக்கக் கவலை. பொண்டாட்டிக்கு எப்போதும் போல பொறுப்பான புருஷனாய் நடிக்க வேண்டிய கட்டாயக் கவலை. நான் சம்பாதிக்கும் பணத்தை என்னிடமிருந்து காப்பாற்றி சேமிக்க முடியாத விபரீதக் கவலை. இதைத் தவிர எனக்கு இருக்கவே இருக்கிறது நாட்டைப் பற்றிய, உலகத்தைப் பற்றிய பெரும் கவலைகள்.
Add Comment