தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் கடந்த வாரம் காலமானார். தபேலா என்ற தாளவாத்தியக் கருவிக்குத் தனித்த அடையாளம் தந்தவர். தமது 73 வது வயதில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இசையாகிப் போனார்.
அவர் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்தபோதே அவரது தந்தையான அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை மோசமாயிருந்தது. அவர் அப்போதே புகழ்பெற்ற இசையமைப்பாளர். மேதை. குழந்தை பிறந்திருக்கிற தகவல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. மருத்துவமனைக்குச் சென்று அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து குழந்தை வீட்டிற்கு வந்தபோதுதான் முதன்முதலில் பார்த்தார்.
அவர்கள் மத வழக்கப்படி தந்தை குழந்தையில் காதில் பாங்கு (இஸ்லாமியத் தொழுகைக்கான அழைப்பு) ஓத வேண்டும். ஆனால் குழந்தையைக் கையில் ஏந்தியவுடனேயே, அல்லா ரக்கா அதன் காதில் தபேலாவுக்கான ஆதார ஜதியை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து அந்த ஒலிதான் ஜாகிர் உசேனுக்கு வாழ்வென்று ஆனது. தனது குழந்தைப் பருவத்திலேயே, அந்தத் தாள வாத்தியக் கருவியை ஆளும் அரசனென மாறத் தொடங்கினார். பின்னாளில் உலகப்புகழ் பெற்ற கலைஞரானார்.
Add Comment