ஜிம்பாப்வே, ஒரு தென்னாப்பிரிக்க நாடு. கிரிக்கெட் புண்ணியத்தால் இங்கு பெயரளவிலாவது பரவலாக அறியப்பட்ட நாடு. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைப் போல ஜிம்பாபவேயும் ஓர் ஏழை நாடு. வறுமை, நோய்மை, பஞ்சம், பட்டினி எல்லாம் இங்கு ஏகமாக உண்டு. கடந்தசில ஆண்டுகளாக நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் வீங்கி உள்நாட்டுப் பணத்தின் மதிப்பு பாதாளத்தில் விழுந்திருக்கிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஆறேழு மாதங்களுக்குள் ஐம்பத்தி ஐந்து சதவீதம் வரை உயர்ந்து விட்டன.
அத்தியாவசியப் பொருள்களுக்குள் அடிப்படைத் தேவையான மாத்திரை மருந்துகளும் அடக்கம். தைராய்டு, தலைவலி, சளி என அன்றாடம் புழங்கும் மருந்துகளின் விலை இங்கு 85 டாலர் (ஒரு மாதத்திற்கு). இதே மருந்துகளின் விலை பக்கத்து நாடான ஜாம்பியாவில் 13 டாலர்தான். இங்கிருந்து ஜாம்பியா சென்று திரும்ப வரும் செலவும் 14 டாலர்களுக்குள் அடங்கிவிடும். எனவே நூறு கிலோமீட்டருக்கு மேல் பயணித்து ஜாம்பியாவுக்குச் சென்று மருந்து வாங்கி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ஜிம்பாப்வே மக்கள்.
ஜிம்பாப்வேயின் வடக்குப் பகுதியில் இருக்கிறது ஜாம்பியா. இரு நாடுகளுக்குமான எல்லைக் கோட்டில் பாதுகாப்புப் பரிசோதனைகள் வழக்கம்போல உண்டு. அதிகாரிகள் உடைமைகளைச் சோதனையிட்டு, காரணங்களை உறுதி செய்து கொண்டு பத்து நிமிடத்திற்குள் 24 மணி நேரப் பாஸை வழங்கி விடுகின்றனர்.
Add Comment