46. மன்னிப்பு
நம் ஊர்த் திரைப்படங்களில் வில்லன் ஊருக்குள் நுழைந்து யாரையாவது கண்டபடி அடித்துப்போட்டுவிட்டுப் போவான். சிறிது நேரத்தில் காவல்துறை வரும், அடிபட்டுக் கிடக்கிறவரிடம், ‘என்ன நடந்தது? யார் உங்களை அடிச்சாங்க?’ என்று விசாரிக்கும். ‘ஒண்ணுமில்லைங்க, நான்தான் தெரியாம தடுக்கிக் கீழே விழுந்துட்டேன்’ என்று அவர் பதில் சொல்வார்.
இதைக் கேட்டதும் அந்தக் காவலர் மிகவும் கடுப்பாகிவிடுவார், சுற்றியிருக்கிற மக்களைப் பார்த்து, ‘நீங்களாவது உண்மையைச் சொல்லுங்க, இவரை யார் அடிச்சாங்க?’ என்று கேட்பார். அவர்களும் எதுவும் பேசாமல் ஆளுக்கு ஒரு திசையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் ஒருவரும் வாயைத் திறக்கமாட்டார்கள்.
கோகலே பார்த்த அன்றைய புணே நகரம் அப்படித்தான் இருந்தது. சில வாரங்களுக்கு முன்னால் பிரிட்டிஷ் இராணுவம் பிளேக்கைக் கட்டுப்படுத்துகிற சாக்கில் அந்த ஊரைக் கீழே போட்டு மிதித்திருந்தது. ஆனால், மக்கள் அதைப்பற்றிப் பேச மறுத்தார்கள். முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த முணுமுணுப்புகள்கூட இப்போது இல்லை. ‘இராணுவமா? வன்முறையா? சேச்சே, அவர்களைப்போல் நல்ல பிள்ளைகள் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்!’ என்று மொத்த ஊரும் சொல்லாமல் சொன்னது.










Add Comment