தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக் கடைகள், டிஃபன் சென்டர்கள், கஃபேக்கள், ஸ்நாக்ஸ் பாயிண்ட்கள், தள்ளுவண்டிக் கடைகள் என்று வாரத்துக்கு ஒன்றாகப் போய்ச் சாப்பிட்டீர்காளால் மொத்தக் கடைகளிலும் நீங்கள் உண்டு முடித்திருக்க இரண்டு வருடங்கள் ஆகிவிடும். சொல்வதற்கில்லை… அதற்குள் நாலைந்து உணவகங்கள் புதிதாகத் தோன்றி இருக்கும். ஒருசில கடைகள் இடம் மாறி, பெயர் மாறி, உருமாறிப் போயிருக்கும். பிறகென்ன… போட்ட கோட்டையெல்லாம் அழித்து மறுபடியும் தொடங்க வேண்டியதுதான்.
சங்கீதா, அட்ஷயம், கோரா ஃபுட் ஸ்ட்ரீட் எனப் புதிதாக வந்திருக்கும் கடைகளோடு சரவண பவன், வசந்த பவன், அடையார் ஆனந்த பவன், ஹாட் சிப்ஸ் போன்று சென்ற நூற்றாண்டிலிருந்து நல்ல பெயரோடு நின்றிருக்கும் உணவகங்களும் இங்கே உண்டு. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை கூவத்தில் இருக்கும் கொசுக்கள் ஒருவேளை உறங்கிக் கொண்டிருக்கலாம். அண்ணாநகர் வாசிகள் சுறுசுறுப்பாக எழுந்து ஏழு மணியிலிருந்தே ரெஸ்டாரெண்ட்டுகளுக்கான உலாவைத் தொடங்கி விடுவார்கள்.
Add Comment