ஊபர், ஓலா போன்ற செயலிகளில் உங்கள் இருப்பிடத்தை மேப்பில் குறித்து வாகனம் புக் செய்திருப்பீர்கள். இதே போன்றதொரு செயலியில் ரஷ்ய எதிரிகளின் இருப்பிடத்தை உக்ரைன் உளவாளிகள் குறித்து விடுகிறார்கள். ட்ரோன் குழுக்களுக்கு அறிவிப்பு சென்றுவிடுகிறது.
அந்த இருப்பிடத்துக்கு ட்ரோனை அனுப்பிக் குறி தவறாமல் எதிரியை அழிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். துப்பு கொடுத்த உளவாளிக்கும், ட்ரோனை இயக்குபவருக்கும் பரிசுப் புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. செயலியில் இணைந்துள்ள மற்றவர்கள் சிவப்பு இதயங்கள், பட்டாசு வெடிப்பு, கைதட்டல் எமோஜிக்களை அளித்து இருவரையும் உற்சாகப்படுத்துகிறார்கள்.
இது அலைபேசிகளில் விளையாடப்படும் போர் விளையாட்டு அல்ல. உக்ரைன் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘ஆர்மி ஆஃப் ட்ரோன்ஸ் : போனஸ்’ என்னும் செயலி. ஒரு வருடத்துக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் ஒவ்வொரு மாதமும் நூறு ட்ரோன் குழுக்கள் புதிதாகச் சேர்கின்றன. இவர்கள் இதுவரை பதினெட்டாயிரம் ரஷ்ய வீரர்களைத் தாக்கியிருக்கிறார்கள்.














Add Comment