2025 என் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டு. இந்த வருடத் தொடக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் பணியிலிருந்து சிறிது காலம் விடுப்பு (sabbatical) எடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதேசமயத்தில் ஆசிரியர் பா.ராகவன், எழுத்துப் பயிற்சி வகுப்பு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அவருடைய வலைத்தளத்தைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். இதற்கு முன் பல முறை இதே போன்று பயிற்சி வகுப்புகள் குறித்து அவர் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்களால் அவற்றில் இணைய முடியாமல் போய்விட்டது. இந்த முறை எல்லாம் கச்சிதமாகப் பொருந்தி வந்து வகுப்பில் இணைந்துவிட்டேன்.
வாரம் இரண்டென எட்டு வகுப்புகள் மிகச் சுவாரசியமாக நடைபெற்றன. மற்றெல்லாக் கலைகளையும் போல எழுத்துக் கலையும் எல்லோருக்கும் கைகூடுவதல்ல என்பதே அதுவரை என் திண்ணம். ஆனால் ஆசிரியரின் வகுப்புகள் அவ்வெண்ணத்தை முற்றிலும் மாற்றியமைத்தன. ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் அவர் கொடுக்கும் பயிற்சிப் பாடங்களின் மூலம் எல்லோரும் எழுத முடியும் என்பது தெளிவானது.















Add Comment